வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும்.
***** ****
திரும்பிப் பார்க்கிறேன்
வருடங்கள் பத்தாகியும்
வலியின் தடங்களை..!
கொட்டிய நச்சு
வெடிகளுக்கு மத்தியிலே
பீறிட்ட இரத்தங்களும்
குவிந்த தசைகளும்
பீதி நிறைந்த
மக்கள் கூட்டத்தின்
வானையெட்டும் மரண
ஓலங்களின் அதிர்வும்
இன்று போல் ஒவ்வொன்றாய்
நெஞ்சிலாடுகின்றதே..!
விடுதலையை வேண்டி
தனித்துவம் பேணி
ஆர்ப்பரித்த எம்மினத்தை
அடக்கிவிட எண்ணியே
கூட்டிணைந்த உலக
வல்லரசுகளின் பின்னூட்டலில்
குதறப்பட்ட வாழ்வும்
சரிக்கப்பட்ட சரித்திரமும்
என்றும் தணியாத் தாகத்தை
அன்றே கொன்றிட
அகல விரிந்து
பேரினவாதிகள் தீட்டிய
கூர்ப்பொறி தன்னில்
வெந்து நீறாகிய
பண்பும் அது நிறை வாழ்வும்
வீதியிலே விடப்பட்டு
வருடங்கள் பத்தாகியும்
வலிக்கிறதே இன்றுபோல்…!
இருகை தூக்கியே
வெறுமையைக் காட்டியே
புரிதலின் இலகுவில்
வெண்கொடி தாங்கியே
வந்த மக்களும் கண்முன்னே
வதைபடலாயினர்…!
வந்தபின் புரிந்தது
உடையவன் எவனோ
அவன் உடன் இல்லையெனில்
கொல்லாமல் கொல்லும்
வலிபெரிதென்று…
ஒவ்வொன்றாய்
நினைக்கையிலே கனக்கிறது
வருடங்கள் பத்தாகியும்
வலியின் வழித்தடங்கள்
இரா.செம்பியன்-