கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.
கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது
இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின…
முள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது
செத்தவனின் உடலைத் தூக்கச் சென்றவர்கள் செத்தார்கள்
கொத்துக் கொத்தாகச் செத்தார்கள்
வீதிகள் தறப்பாள் வீடுகள் எங்கும்
பிணக்குவியல்கள் நிறைந்திருந்தன!
காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.
காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்
கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை…
நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக
யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை…
யுத்தம் குடித்து சிந்திய ரத்தம்
வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை…
கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்
கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை…
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?
பஞ்சமும் பசியும் நிறைந்த ஊண், உறக்கம் அற்ற
நரக வாழ்க்கைதான் நிறைந்தது!
பிணக் குவியல்களுக்குள் இருந்து
குற்றுயிரும் குறை உயிருமாக தப்பியவர்கள்
நீண்ட வரிசையில் அடுக்கப்பட்டு
சிறைப்பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு
முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள்!
முள்ளிவாய்க்காலோடு முடக்கி
கிடந்த தமிழினம்
முழு மூச்சோடு நிமிர்ந்து
நிற்கிறது
இனிமேலும் எவனும்
கிட்ட நெருங்கி எம்மை அடக்க
நினைப்பான என்ன??
இன்று துரோகிகள்
ஓடி ஒளிக்கின்றனர்
முப்பது நாடும் ஒன்றாய்
செய்த தவறை மறைக்க தமிழனுக்கு
தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன
நாட்களை நகர்த்தியபடி.
பூனையின்
பிணத்தைக் காட்டி
‘புலியைக் கொன்றுவிட்டோம்’
என்னும்
ஓநாய்களின் கூச்சலை
ஒதுக்கிவிட்டுக் கேள்
புலியின் உறுமல் கேட்கும்!
தாயக விடுதலையை
உயிர் மூச்சாய் கொண்டவர்கள்
தமிழீழ தேசமெங்கும்
விதையாய் கிடக்கின்றார்…
எழு!
விவேகத்தைத் துணை கொள்
பொறி கொண்ட விடுதலையை
ஊதிப் பெரிதாக்கு
உலகம் எம்பக்கம்
உண்மையும் எம்பக்கம்
எங்கள் எல்லை நீக்கி
உங்கள் படைகள்
ஓடும் வரை
எங்கள் வீரர்க்கு
இறப்பே இல்லை….
– ஈழத்து நிலவன் –