ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி. இவரது 2-வது மகன் கருப்பசாமி (வயது24). கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் சென்றபோது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் விலக்கில் பஸ் சென்றபோது அந்த பஸ்சில் பயணம் செய்த 2 பேர் கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கருப்பசாமி பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி கோவில்பட்டி செண்பகா நகரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரது மகன் அப்துல்லா (18) கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் கருப்பசாமியின் அண்ணன் கனகராஜ், தம்பி மந்திரமூர்த்தி ஆகியோர் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் கருப்பசாமியை முகமது ரபீக் கூலிப்படையை ஏவி சுட்டு கொன்றிருக்கலாம் என்று தெரியவந்தது.இதையடுத்து முகமது ரபீக்கின் வீடு மற்றும் கடைகள் உள்ளிட்ட உறவினர்கள் வீடுகளிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
மேலும் நெல்லை, தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 9 பேரை பிடித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் முகமது ரபீக் (43) மதுரை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.இதையடுத்து முகமது ரபீக்கை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் வருகிற 17-ந்தேதி சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முகமது ரபீக்கை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து முகமது ரபீக் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் நடத்திய விசாரணையில் முகமது ரபீக் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-எனது மகன் கல்லூரி மாணவரான அப்துல்லா (18) கடந்த ஜூலை 2-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய கருப்பசாமியின் சகோதரர்கள் கனகராஜ், மந்திரமூர்த்தி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கருப்பசாமி விடுமுறையில் ஊருக்கு வந்திருப்பதாக அறிந்தேன்.
எனவே அப்துல்லா கொலைக்கு பழிக்குப்பழியாக கருப்பசாமியை கொல்ல திட்டமிட்டேன். நாட்டு துப்பாக்கி எடுத்து கொண்டு கருப்பசாமி பயணம் செய்த பஸ்சின் பின்பகுதியில் அமர்ந்திருந்தேன். படந்தால் விலக்கு அருகே பஸ் நின்றபோது கருப்பசாமியின் பின் தலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டேன். என்னையும், எனது குடும்பத்தினரையும் போலீஸ் தேடுவதை அறிந்து போலீசில் சரண் அடைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
ஓடும் பஸ்சில் கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் முகமது ரபீக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 17-ந்தேதி சாத்தூர் கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்கிறார்கள்.