அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்- யாப்பா

366 0

அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் ஊடக அமைப்பினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியிருந்தார்.

இதன்மூலம் அக்காலப்பகுதியில் எவ்வாறான பாதுகாப்பு வலையமைப்பு செயல்படுத்தப்பட்டிருந்தது என்பது புலனாகியுள்ளது. அதனாலேயே அப்போதைய தீவிரவாத செயற்பாடுகளிலிருந்து நாட்டை காப்பாற்ற முடிந்தது.

தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதச் செயல்கள் குறித்து பிரதமர் ஏற்கனவே அறிந்திருந்தார். இதனை தடுத்து நிறுத்த அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார்.

தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. மக்கள் விரோத அரசாங்கமாக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

எனவே, இனியேனும் அமெரிக்காவின் ஆலோசனைகளை செவிமடுக்குமாறு அரசாங்கத்தை கோருகிறோம். முன்னைய ஆட்சிக்காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட மதிப்பை பிரயோசனப்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.