சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் பீஷ்மா ராணுவ பீரங்கி தயாரிக்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தில் நவீன ரக பீரங்கி டாங்கிகள் உள்ளன. இதில் ரஷ்ய நாட்டு தயாரிப்பான டி-90 பீஷ்மா பீரங்கி டாங்கிகள் ராணுவத்திடம் உள்ளன.
ரஷிய நாட்டு ராணுவத்தில் டி-90 வகை பீரங்கிகள் முதன்மையாக பயன் படுத்தப்படுகின்றன. இந்த டாங்கிகள் இந்திய ராணுவத்தில் சேர்க்க 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப ராணுவத்தை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக ரூ.13 ஆயிரத்து 448 கோடி மதிப்பீட்டில் டி-90 எஸ் ராணுவ பீரங்கி டாங்கிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ராணுவ பீரங்கி டாங்கியில் முன்பு இருந்ததைவிட கூடுதல் நவீன தொழில் நுட்பங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட டி-90 எஸ் டாங்கியில் இரவு நேரத்திலும் துல்லியமாக இலக்கை பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெப்பத்தை காட்டும் கருவி, நவீன துப்பாக்கிகள், ஏவுகனைகள் போன்றவற்றையும் உள்ளன. 46.5 டன் எடையுடன் 1000 எச்.பி. என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நவீன டி-90 பீரங்கி டாங்கிகள் சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கி இருக்கிறது.
அதன்படி ரஷிய நாட்டிடம் இருந்து தொழில்நுட்பங்களை பெற்று 464 பீரங்கி டாங்கிகள் ஆவடியில் தயாரிக்கப்பட உள்ளது.
2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டுக்குள் பீரங்கிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 64 டாங்கிகள் 30 முதல் 41 மாதங்களில் தயாரித்து கொடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நவீன பீரங்கி டாங்கிகள் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறது.