பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி

411 0

மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி கனடாவிற்கு சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தைக் கைவிட்டன.

இதற்கிடையே, சிறையில் இருந்து விடுதலையான ஆசியா பீவி, நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது. ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆசியா பீவி பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் எப்போது நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்? எங்கு சென்றார்? என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் அவர் கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆசியா பீவி ஏற்கனவே கனடாவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், கனடாவில் அவரது மகள்களுடன் சேர்ந்துவிட்டதாகவும் ஆசியா பீவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆசியாவுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆசியா பீவி பாகிஸ்தானை விட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்வரை, அவரை யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைத்துள்ளனர்.