இலங்கை மத்திய வங்கி வசமிருந்த இரகசியத் தரவுகள் வெளியில் கசிந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாரிடம் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் இரகசியத் தரவுகள் வெளியானது சம்பந்தமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பையடுத்தே சி.ஐ.டியின் உதவிகோரப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி பிரசெல்ஸ் செல்லவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திருப்பிய பின்னர், இது சம்பந்தமாக நிதிச்சபையை அழைத்துப் பேச்சு நடத்துவார் என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் இரகசியங்களை வெளியிட்டவர்கள் தொடர்பான விவரங்களைக் கண்டறிவதற்காக இந்தச் சந்திப்பின்போது குழுவொன்று அமைக்கப்படலாம் என்றும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
மத்திய வங்கியின் இரகசியத் தரவுகளை வெளியில் கசிய விடுகின்றமையானது பாரியதொரு குற்றமாகும். எனவே, இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தராதரம் பராது கடுமையாக நடவடிக்கை எடுப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளது.
மத்திய வங்கியின் இரகசியத் தரவுகள் வெளியில் கசிகின்றமையானது அனைத்துல மட்டத்தில் இலங்கைக்கு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதுடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.
ஆகவே, பிரசெல்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இது விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.