தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் கோரதாண்டவம் ஆடுவதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. படிப்படியாக மழை பெய்ய ஆரம்பித்து 18-ந் தேதியில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் நாளை (இன்று) லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் ஒடிசா, வங்காளதேசம் இடையே கரையை கடக்க கூடும். இந்த புயல் ஆரம்ப நாட்களில் தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.