பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மதுரையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் தடைப்பட்டது.
உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அதுவும் திடீர் பழுது அடைந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தது.
ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.
ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறுகையில், “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.