கோயம்புத்துரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி மாவட்டத்துக்கு மாற்றியதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து லாரியில் தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று மாலை வந்திறங்கின.
இதையறிந்த தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டன.வேறு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை இங்கு வைத்துள்ளதாக புகார் எழுந்ததால், அங்கு இறக்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்து காண்பிக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத 50 இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியுள்ளோம் என்று வருவாய் அலுவலர் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு, தேவை கருதியே தேனிக்கும் ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கை. மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார்.