ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய இரண்டு நாட்கள் விசேட பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறும்.
அத்துடன் இந்த வாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் விவாதம் குறித்து ஆராய மீண்டும் நாளை விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது.
இன்று பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் நேற்று கட்சித்தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
இதன்போது வழமையான நிகழ்ச்சி நிரலை ஒத்திவைத்துநாட்டின் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் ஒருநாள் விவாதத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை முன்வைத்தார். எனினும் ஒருநாள் விவாதம் நடத்துவது சாத்தியமற்றது ஆகவே இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும், அதற்கான ஒழுங்குபடுத்தல்களை செய்துதரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை முன்வைத்தார். அனுரகுமார எம்.பி.யின் இந்தக் கோரிக்கைக்கு சகல தரப்பினரும் ஆதரவு வழங்கிய நிலையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தி நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழல் குறித்து ஆராய இணக்கம் காணப்பட்டுள்ளது.