தனிநபர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உண்மையான தகவல்களை அறியாது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு போர தொட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தனிநபர் இருவருக்கிடையில் இடம்பெற்ற கருத்து மோதலால் ஏற்பட்ட அமைதியற்ற சூழல் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பட்டமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வதந்திகள் பரப்பட்டு அந்த பிரச்சினை என்னிடம் கொண்டு வரப்பட்டது. இதனை பாரிய பிரச்சினையாக ஏற்படாமல் தடுக்குமாறு பாதுகாப்பு பிரிவினரிடமும், அரச அதிகாரிகளிடமும் கோரப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கு அறிவு பூர்வமாக முகங்கொடுப்பதோடு, தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக இஸ்லாம் மக்களுடன் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது சுமூகமான செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் குறித்து உண்மைத் தகவல்களை தெரிந்து கொள்ளாது மக்கள மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தகலவல்களைப் சமூக வலைத்தளங்களில் பகிர்தல் , பதிவிடுதல் மற்றும் செய்திகளை வெளியிடுதல் என்பவற்றை வதந்திகளைப் பரப்புவோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் மாத்திரமின்றி ஏனைய பிரதேசங்களிலுமுள்ள மக்கள் இவ்வாறு போலி தகவல்களைப் பரப்பு வன்முறையைத் தூண்டுபவர்கள் தொடர்பாக கவனத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.