நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து அச்சம் காரணமாக வெளியேறியதையடுத்து அவர்கள் நீர்கொழும்பு காவல் நிலையத்திலும்இ அப்பகுதியிலுள்ள இரண்டு அஹமதி பள்ளிவாசல்களிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் பள்ளிவாசல்களுக்கு சிறிலங்கா காவற்துறையும் இராணுவமும் பாதுகாப்பு வழங்கிவருகின்றன. இந்நிலையில் இவ் அகதிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த பிக்குகளும் உள்ளுர்வாசிகளும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
இவ்வாறு நீர்கொாழும்பில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் எண்ணிகை பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் (UNHCR) வெளியிடப்பட்ட தகவல்களின் படி 1600 அகதிகள் வரை தமது பதிவில் உள்ளதாகத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அகதிகளை ஏனைய இடங்களிற்கு மாற்றுவதனை சிங்கள கடும்போ்காளார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். அதனால் இவர்களை வடக்கில் தங்க வைப்பதற்கு வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் உடன்பட்டிருப்பதாகவும், இறுதிமுடிவினை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது.
முதலில் யாரிந்த அகதிகள் என்று பார்ப்போம். இவ் அகதிகள் பெருமளவிலானவர்கள் பாக்கிஸ்தானில் வாழும் அஹமதி மற்றும் சியா ஆகிய இஸ்லாமிய மதப்பிரிவுகளைப் பின்பற்றும் ஹசாரா இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொரு தொகுதியினர் கிறிஸ்தவர்கள். இவர்களைத் தவிர மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், ஒரினச்சேர்க்கையாளர்கள் என பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்களும் இவ் அகதிகளில் அடங்கின்றனர். இஸ்லாத்தின் அஹமதி மதப்பிரிவினர் தமது இறைதூதராக அஹமது என்பவரைக் கருதுவதாகவும் ஏனையவர்கள் முஹம்மதுவை இறைதூதராக ஏற்றுக்கொள்வதனால் அஹமதியர்களை முஸ்லீம்கள் அல்லர் என பாக்கிஸ்தான் அரசாங்கம் 1974 இல் அரசமைப்பு மூலமாக அறிவித்தது. இஸ்லாமிய சுன்னி மதப்பிரிவினரின் அதிகாரம் செலுத்தும் பாக்கிஸ்தானில், அஹமதியர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள். இந்துக்கள், சியா பிரிவு இஸ்லாமியர்கள் எனச் சிறுபான்மையினர் நீண்ட காலமாகவே ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அஹமதி பிரிவினர் இஸ்லாத்திறற்கு எதிரானவர்கள் (காபிர்கள்) என பாக்கிஸ்தானில் உள்ள அடிப்படைவாதிகள் கூறிவருவதனால் இக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் உயிரச்சம் காரணமாக ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறிவருகிறார்கள்.
2012-14 காலப்பகுதியில் 1200 பாக்கிஸ்தானிய அகதிகள் சிறிலங்காவிற்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிகிக்கின்றன. பெசாவர் நகரில் அமைந்திருக்கும் அமைந்திருக்கும் All Saints Church 2103 இல் தலிபான்களால் தாக்கப்பட்டதையடுத்து இந்த அகதிகளின் வருகை அதிகரித்தாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தை பொறுத்தவரை, ஐ.நா. வின் அகதிகளுக்கான உடன்படிக்கை(951 Convention relating to the Status of Refugees and its 1967 Protocol) எவற்றிலும் அது கையொப்பமிடவில்லை. ஆகவே நாட்டுக்குள் வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு அதற்குக் கிடையாது. இருப்பினும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளை ஏற்று இவர்களது தஞ்சக் கோரிக்கையை ஏற்றுகொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வரை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கு இணங்கியுள்ளது.
இவ் அகதிகளை தனித்து UNHCR நிறுவனமே பராமரித்து வருகிறது. கிடைக்கப்பட்ட தகவல்களின்படி தனிநபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு இலங்கை ரூபா 12.000ம் குடும்பமொன்றிற்கு இலங்கை ரூபா 20.000ம் வழங்கப்பட்டு வருகிறது. ஐ.நா. வழங்கும் இக்கொடுப்பனவிற்கு மேலதிகமாக சிறிலங்கா அரசாங்கம் எந்த உதவிகளை செய்வதில்லை. அகதிகளின் குழந்தைகள் கல்விகற்பதற்கான வசதியோ, வளர்ந்தோர் தொழில் செய்வதற்கான அனுமதியோ சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை. நீர்கொழும்பில் தங்கியிருந்த அகதிகளில் கிறிஸதவர்கள் தமது வழிபாட்டினை மேற்கொள்வதற்கு வசதியாக உள்ளுர் தேவாலயம் ஒன்றில் உருது மொழியில் ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோன்று பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் இவ் அகதிகளுக்கு உதவி வருவதாகத் தெரிய வருகிறது. இருப்பினும் அவ்விபரங்கள் கிட்டவில்லை.
இவ் அகதிகளை சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு UNHCR நிறுவனத்திற்கு உள்ளது. தவிர சிறிலங்கா அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக அக்கறை கொள்ளவில்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து நிறுவனமான Front Line Defenders இல் பணிபுரியும் ருக்கி பெர்னான்டோ போன்றவர்கள் இவ் அகதிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்இ வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் அகதிகளை வடக்கில் தங்க வைப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இம்முடிவினை சுமந்திரன்இ மற்றும் ருக்கி பெர்னான்டோவிற்கு நெருக்கமான சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்றுள்ள நிலையில் இம்முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டதிலிருந்து எதிரப்புக் கிளம்பியுள்ளது. பாக்கிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் தங்கவைக்கும் முயற்சிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். அதுபோன்று வவுனியா மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் இயங்கும் People for Equality and Relief in Lanka (PERL) என்ற அமைப்பு, மேற்கு நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து இவ் அகதிகளை குடியேற்றுவதற்கு தமது ஆதரவினை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனங்களுள் ஷெரின் செருர் என்பவரது Women’s Action Network, விழுது, அடையாளம், மாற்றம், வல்லமை ஆகியவையும் அடங்குகின்றன.
அகதிகளை வவுனியாவில் குடியேற்றுவதற்கு தமிழ்மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோருபவர்கள் உலகின் பல நாடுகளில் ஈழத்தமிழர்கள் அகதித் தஞ்சமடைந்து வாழ்வதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழர்கள் மற்றைய நாட்டு அகதிகள் மீது இரக்கம் காட்டவேண்டும் எனவும் தமது பிரதேசங்களில் குடியமர்த்துவதற்கு தார்மீக ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் தமது வாழ்நாளில் ஒருதடவையாவது அகதி வாழ்க்கையை அனுபவித்தவர்கள். அவர்களுக்கு ஏனைய அகதிகளின் நிலமை நன்கு புரியும். ஒருவேளை தமிழர்கள் அகதிகளாக இடம்பெயராமிலிருந்திருந்தாற்கூட அகதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய மனிதாபிமானக் கடமை அவர்களுக்குண்டு. ஆகவே பாக்கிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியமர்த்தும் விடயத்தில் அவர்கள் சாதகமாக நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயமுண்டு. இருப்பினும் நடைமுறையில் இது சாத்தியமானதா? பின்விளைவுகளை கருத்தில் எடுக்காமல் வெறுமனே உணர்வுபூர்வமாக இவ்விடயத்தை அணுகமுடியுமா?
அகதிகளை எங்கு குடியமர்த்துவது அல்லது அவர்கள் தங்கியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றுவது என்ற முடிவினை சிறிலங்கா அரசாங்கம் மாத்திரமே எடுக்க முடியும். வழமையாக இவ்வாறான விடயங்களில் தமிழ் மக்களின் கருத்தினைச் செவிமடுத்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்டுவதில்லை. இவ்வாறான பின்னணியில் மேற்குறித்த தொண்டு நிறுவனங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்காமல் தமிழ்மக்களின் ஆதரவினை வேண்டி நிற்பதற்கான காரணத்தை விளக்கவில்லை. ஏற்கனவே தமது பகுதிகளில் குடியேற முடியாது, தமது காணிகளை படையினரிடம் இழந்து தவிக்கும் வடபகுதி தமிழ்மக்கள் ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகளை தற்காலிகமாகவேனும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது..
குறித்த அகதிகள் எந்நேரத்திலும், சிங்கள பௌத்த இனவாதிகளினதும், வகாபிச இஸ்லாமிய தீவிரவாதிகளினதும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ் அகதிகளுக்கு எதுவித பாதுகாப்பினையும் தமிழ்மக்களால் வழங்க முடியாது. தமக்கென ஒரு நடைமுறை அரசை வைத்திருந்த காலத்தில் இவ்வாறான கோரிக்கை வைக்கப்பட்டிருப்பின் அதனை சாதகமாக பரிசீலிக்கப்பட்டிருக்கும். இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழர்கள் தங்களது பாதுகாப்பினையும் கேள்விக்குள்ளாக்க விரும்பமாட்டார்கள். அதுபோன்று இந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது என்ற சாக்கில் இராணுவத்தினர் தமது பகுதிகளில் நிலைகொள்வதனையும் தமிழ்மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதனை வெறுமனே கொள்கை அடிப்படையில் அறிக்கை விடும் தரப்புகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.