பாடசாலைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு!

313 0

பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பினும் கூட, அந்தப் பொறுப்பை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது சுமத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுவருவது கவலையளிக்கின்றது என்று இணைந்த ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்திருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும், அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமை அண்மையில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவத்திலிருந்து தெளிவாகியிருக்கின்றது.

அரசாங்கம் மாத்திரமன்றி நிர்வாக மட்டத்தில் உள்ள அனைவரும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதிலிருந்து விலகியிருக்கிறார்கள். இத்தகைய தாக்குதலொன்று இடம்பெறப்போவதாக முன்னரே அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நாடு எதிர்கொள்ளும் வகையில் தீவிரவாதமும், அடிப்படைவாதமும் வேரூன்றும் விதத்தில் கடந்தகாலங்களில் செயற்பட்டிருத்தல் என்பனவும், சர்வதேச அடிப்படைவாதிகள் இங்கு சுதந்திரமாகச் செயற்படத்தக்க வகையில் அரசாங்கம் பின்பற்றுகின்ற சர்வதேச கொள்கைகளுமே இந்த தாக்குதலுக்கு சாதகமான பின்னணியை உருவாக்கியிருக்கின்றன.