அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவிர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைவாக தரம் – 6 லிருந்து 13 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கவும், தரம் – 1 தொடக்கம் தரம் – 5 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் நாட்டில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒருவார காலமாக அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது.
அதன்படி பாதுகாப்பு கருதி பிற்போடப்பட்ட இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
விஷேட சோதனை நடவடிக்கைகள்
இன்றைய தினம் கல்வி நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இம்மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளிலும் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைள் நேற்றைய தினம் நிறைவடைந்தன.
அத்தோடு கொழும்பிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு நேற்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மாத்திரமின்றி தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் பிரதேச பொஸில் பிரிவுகளினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலை பாதுகாப்பு
பாடசாலையின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் பிரதேச பொலிசார் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் பாடசாலை பிரதான நுழைவாயில் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளல் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்டோருக்கு அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்
பாடசாலைகளுக்கான பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். முப்படையினர் மாத்திரமின்றி பாடசாலைகளிலுள்ள மாணவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து அதன் மூலமாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விஷேடமாக பாதுகாப்பு சபை வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறில்லையென்றால் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஒருபோதும் அனுமதியளித்திருக்கப்பட மாட்டாது. காரணம் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது.
குண்டு தாக்குதல்களுக்கு பின்னர் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை பிற்போட முடியாது. எனினும் சில தரப்பினரால் மக்களுக்கு பயத்தை உண்டாக்கும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை கவனத்தில் கொள்ளாது அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்பு படை மீதும் நம்பிக்கை வைத்து பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்று கோருவதாகத் தெரிவித்தார்.
பொலிஸ் பேச்சாளர் ருவண் குணசேகர
பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவிக்கையில்,
சகல பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பாடசாலைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸ் தலைமையத்தின் மூலம் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் இது குறித்து தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர விஷேடமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவின் மூலமும் இதற்கான பிரத்தியேக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான நியமிக்கப்பட்ட விடேஷ குழுக்களின் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பாடசாலை சேவை வாகனங்களை நிறுத்துவதற்கான விஷேட தரிப்பிடங்கள்
பாடசாலைகள் ஆரம்பமானவுடன் அருகில் தேவையற்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலை சேவைக்குரிய பஸ் மற்றும் வேன்கள் என்பவற்றை நிறுத்துவதற்கான விஷேட தரிப்பிடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாகனங்களை நிறுத்துவதற்கு குறித்த பிரதேசத்தின் பொலிஸ் பிரிவில் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
அதற்கமைய கொழும்பிலுள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகளின் வாகனஙக்களை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்ற அட்டவணையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்காக வாகனங்கள் வைஸ்பிடிய ஆனந்த மாவத்த மற்றும் டீ.ஆர் விஜேவர்தன மாவத்த கொழும்பு 10 ஆகிய இடங்களிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
வெல்லவீதிய பொலிஸ் பிரிவு
வெல்லவீதிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வாகனங்கள் சங்கராஜ மாவத்த , குமார தொரட்டுவ மெல்வத்த மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.
மேலும் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் மாளிகாவத்தை, சத்தர்ம மாவத்தை சதோச வாகன தரிப்பிடத்திலும், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வாகனங்கள் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் கொழும்பு 2 யூனியன் பிலேஸிலும், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் கொழும்பு 12, சோன்டஸ் மைதானத்திலும் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதே போன்று மோதரை பொலிஸ் பிரிவில் கொழும்பு 15, மட்டக்குளி விஸ்வைட் மைதானத்திலும், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள பகுதியிலும் பாடசாலை வாகனங்களை நிறுத்தவேண்டும்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் சங்கராஜ மாவத்தை மெல்வத்த மைதானத்திலும், சுகததாச விளையாட்டரங்கிற்கு பின்னாலுள்ள பகுதியிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
கிருலப்பன பொலிஸ் பிரிவில் கிருலப்பனை, ஹைலெவல் வீதி லலித் எதுலன் முதலி மைதானத்திலும் பாடசாலை வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவில் நாரஹேன்பிட்ட, பாக் வீதி ஷாலிகா மைதானத்திலும், பொரளை பொலிஸ் பிரிவில் பொரளை, பேஸ்லைன் வீதி கெம்பல் மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
குருந்துவத்த பொலிஸ் பிரிவில் கொழும்பு 7 , எப்.ஆர் சேனாநாயக்க மாவத்த, ஆனந்த குமாரசுவாமி மாவத்த, தர்மபால மாவத்த ஆகிய இடங்களிலும், கொழும்பு 7 அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அருகிலும், நந்ததாச கொட்டாகொட வீதி, மார்கஸ் பிரனாந்து வீதி ஆகிய இடங்களிலும், கொழும்பு 3 , பெரஹரா வீதி ஸ்டேன்லி ஜேன்ஸ் மைதானத்திலும், கொழும்பு 7 ரோயல் கொம்லெக்ஸ் அரசாங்க தகவல் திணைக்கள வீதிக்கருகிலும், கொழும்பு 7 கிரேகரி வீதியிலும் , மலலசேகர வீதி மைதானத்திற்கு முன்னாலுள்ள பகுதியிலும் , கின்ஸி மாவத்தையிலும் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் கொள்ளுபிட்டி புகையிரத திணைக்களத்திலிருந்து பம்பலபிட்டி புகையிரத நிலையம் வரையும், ஸ்டேன்லி ஜேன்ஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.
பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
பம்பலபிட்டி பொலிஸ் பிரிவில் பம்பலபிட்டி புகையிரத திணைக்களத்திலிருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையும், கொழும்பு 4, ஹைலெவல் வீதியில் உள்ள மைதானத்திலும் , கொழும்பு 6 , லோரன்ஸ் வீதி குரே மைதானத்திலும், கொழும்பு 4, ஹைலெவல் வீதி ஹென்ரி மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
வெள்ளவத்த பொலிஸ் பிரிவில் வெள்ளவத்தை புகையிரத நிலையம் தொடக்கம் இராமகிருஷ்ன சந்தி வரையும் வாகனங்களை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.