உள்ளாட்சியில் கொள்ளையடிக்க, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்த வேனில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க., காங்கிரசை சேர்த்து 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். ஏற்கனவே நடந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். தற்போது சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலிலும் 100 சதவீதம் நாம்தான் வெற்றி பெறுவோம்.
இதன் மூலம் நாம் 119 எம்.எல்.ஏ.க்களை பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம். அதனால்தான் தற்போது 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்து, புதிய சதித்திட்டம் போட்டுள்ளனர். அந்த சதியை முறியடிப்போம்.
பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கினார். ஆனால் அனைத்து தரப்பினரும் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் நல்ல பணத்தை ஒழித்தனர். அவர் வெளிநாடு வாழ் பிரதமராக உள்ளார். வெளிநாடுகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடுவேன் என்றார். ஆனால் 15 காசு கூட போடவில்லை. டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை.
அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். புயல், வெள்ளம், மழை வந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த மோடி அதற்கு ஒரு அனுதாப கருத்தாவது சொன்னாரா?.
எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதல்-அமைச்சர் ஆக்கியதும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். துணை முதல்-அமைச்சர் ஆனதும் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.
பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு காவல்துறை காணாமல் போனதா? உளவுத்துறை என்ன செய்தது? பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுத்த வக்கீலை கைது செய்தனர். இந்த அக்கிரமங்களை அகற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதல் சோதனை அமைச்சர் வேலுமணி வீட்டில்தான். எடப்பாடி பழனிசாமி அவரை பார்த்து பயப்படுகிறார். உள்ளாட்சிகளில் பணத்தை கொள்ளையடிக்கவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் இருகூர் சந்தை, சோளக்காட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்களின் குறைகளை கேட்ட அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.