முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கு ஆதரவு கேட்டு, க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிவாடி, ஆரியூர், எல்ல மேடு, சின்னதாராபுரம், க.பரமத்தி, பவுத்திரம், சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அக் கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டதினால், பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம்.
இப்போது இங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டுபோய் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார். எனவே கட்சி மீது கொள்கை பிடிப்புள்ளவரை தேர்வு செய்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்கள், அவர் முன்பு எந்த திட்டங்களையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அதையெல்லாம் தற்போது செயல்படுத்துகின்றனர்.
இதனால் தமிழக உரிமை பறிபோவதோடு மோடியின் எடுபிடிகளாக பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கின்றனர். அவர்களது ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்ய பரிசு பெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கக்கூடிய இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என்.தங்கவேல் மற்றும் கட்சி யினர் உடனிருந்தனர்