5 ஆண்டு கால ஆட்சியில் பேரழிவுகள்தான் ஏற்பட்டுள்ளன; பிரதமர் மோடியின் அரசு உடனடியாக தூக்கி எறியப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆவேசமாக கூறினார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை வெகுவாக சாடினார்.
நாட்டில் மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசை மக்கள் தூக்கி எறியும் மன நிலைக்கு வந்து விட்டனர். இந்த அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நம்பிக்கை வைக்கவில்லை. மக்கள் விரோதம் என்னும் பலி பீடத்தில், அதன் அரசியல் ரீதியிலான இருப்பு பற்றி மட்டுமே கவலை கொள்கிறது.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் துர்நாற்றம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வந்து விட்டது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்.
மோடியின் பாகிஸ்தான் கொள்கை, சிரத்தை இல்லாதது. அது தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.
நாடு பொருளாதார ரீதியில் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மோடியின் அரசு, நாட்டை பொருளாதார நெருக்கடியில் விட்டுச்செல்கிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கான மத்திய மந்திரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டிய பிரதமர் மோடி, ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். புல்வாமா தாக்குதல், உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்வி.
ஆனால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேச பாதுகாப்பு பற்றிய மோடி அரசின் வரலாறு படுமோசமானது. பயங்கரவாத சம்பவங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளன. ஒரு பொய்யை நீங்கள் 100 முறை பேசி விட்டால் அது உண்மை ஆகி விடாது.
ஜனநாயகத்தில் ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்றதா என்று கேட்கிறீர்கள்.
இந்தியாவில் பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியமானது. ஒற்றை மனிதர் 130 கோடி மக்களின் எல்லா விருப்பங்களையும் பிரதிநிதித்துவம் செய்து விட முடியாது. அவர்கள் எதிர்கொள்கிற எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடவும் இயலாது. ஒற்றை மனிதரின் அறிவு என்பது இந்தியாவுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.