முரண்பாடுகளை தீர்க்க அமைச்சர் மனோவிடம் பிரதமர் ரணில் உத்தரவாதம்!

365 0

1-3-450x254பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இதன்போது தேசிய நல்லிணக்க கொள்கை வகுப்பு தொடர்பிலும், வரவு செலவு திட்ட ஒதுக்கீடு தொடர்பிலும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்த அதிருப்திகளை கவனத்தில் எடுத்த பிரதமர் இவற்றை தீர்த்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

தனது அமைச்சு விவகாரங்கள் தொடர்பில் எழுந்திருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிட்டிருந்த அமைச்சர் மனோ கணேசன், வளப்பங்கீடு மற்றும் கொள்கை வகுப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் உரிய தேர்வு எட்டப்படாவிட்டால், தான் அமைச்சு பதவியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தயங்கமாட்டேன் என தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,இந்நாட்டில் உருவாகும் இன நல்லிணக்கம், சகவாழ்வு அனைத்தும் எமக்கும் ஏற்புடையதாக எமது கருத்துகளையும் உள்வாங்கி உருவாக வேண்டும்.

இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் மனக்குறைகளையும், சிங்கள சகோதர மக்களின் மனவுணர்வுகளையும் ஒருசேர அறிந்தவன் என்ற முறையில்தான், நான் இங்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளேன்.

இந்நிலையில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சிலர் தன்னிச்சையாக கொள்கை வகுப்பதையும், என் அமைச்சுக்குரிய பணிகளில் தலையிடுவதையும் அனுமதிக்க கூடாது.

அதேபோல் எனது அமைச்சுக்கு போதிய நிதியை ஒதுக்க தயங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றுக்கு பின்னால் உள்ள முதிர்ச்சியற்ற அரசியல் எனக்கு புரியாமல் இல்லை.

ஆனால், தமிழ் பேசும் அமைச்சரை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய நல்லிணக்க கொள்கையை உருவாக்க முயல்வது தமிழ் பேசும் மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தவறான சமிக்ஞைகளை தரும். இதை நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளேன்.

இதுதொடர்பில் தான் முழுமையாக உணர்ந்துள்ளதாகவும், எழுந்துள்ள கொள்கை வகுப்பு, நிதி ஒதுக்கீடு உட்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தான் நேரடியாக தலையிட்டு தீர்த்து தருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இப்பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.