சீயோன் உள்ளிட்ட மட்டக்களப்பின் பல தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனை

293 0

குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சீயோன் தேவாலயம் உள்ளிட்ட மட்டக்களப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றன.

படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சொற்ப நேரத்தில் இந்த ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ப்பட்ட சீயோன் தேவலயத்தில், முன்பாக உள்ள மண்டபத்தில் ஆராதனைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். அத்தோடு ஏனைய தேவாலயங்களில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும் பிரபல நட்டசத்திர விடுதிகளிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைதாரிகளினால் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதலில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலத்தில் மாத்திரம் 30பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். அதனைத்தொடர்ந்து சில கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட போதிலும் பல தேவாலயங்களில் ஆராதனைகள் தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது