அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் பலமில்லாமல் எம்மால் தோற்கடிக்க முடியாது. ஆனால், ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லலா ஆகியோர்தான் இந்த பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள். ரிஷாட் பதியுதீனுக்கு, ஹிஸ்புல்லாவிற்கும் இதற்கான அதிகாரத்தை 2008- 2009 களில் பசில் ராஜபக்ஷதான் கொடுத்தார். இந்த அதிகாரத்தை தற்போது யாராலும் பறிக்க முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மட்டும்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இதற்காக முஸ்லிம் மக்களின் 10 இலட்சம் வாக்குகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே பயங்கரவாத செயற்பாடுகளை அவர் கண்டும் காணாமல் இருக்கிறார்.
புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கைகளை விடுத்தும் அவர் அதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் உள்ளிட்ட எந்தவொரு தரப்பையும் செயற்பட இடமளிக்கவில்லை. மாறாக, தனக்கு தேவையான அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காகவே அவர் செயற்பட்டதன் விளைவே இன்று நாட்டு மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி, முஜிபூர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்புக்கள் இன்றி இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதலொன்று இலங்கையில் இடம்பெற வாய்ப்பே இல்லை. இந்த நால்வரும்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிழலிலேயே காணப்படுகிறார்கள். இவர்களின் பிரதான நோக்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதுதான். இதன் ஒருபகுதியாகவே புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமூலத்தைக் கொண்டுவரக்கூட முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், இச்சட்டமூலத்தைக் கொண்டுவர நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.