தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி!

360 0

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. 

இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார்.

இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது.

தேசிய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை பேணிக்காத்து சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த இலங்கைக்கு சீன அரசாங்கம் முற்றுமுழுதான ஆதரவை வழங்குமென சீனத்தூதுவர் உறுதியளித்தார்.

இலங்கையால் விடுக்கப்பட்டிருக்கும் அவசர வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் அதன் ஆற்றலுக்குட்பட்ட தேவையான சகல உதவிகளையும் வழங்கும். அது குறித்து அவசரப் பேச்சுவார்த்தையை சீன அரசாங்கம் இலங்கையுடன் நடத்திக் கொண்டிருக்கின்றது என்றும் சீனத்தூதரகம் அறிவித்திருக்கின்றது.

குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றிவருகின்ற பணிகள் குறித்து சீனத்தூதுவருக்கு விளக்கிக்கூறிய நிமல் குமார், இலங்கைக்கு நெருக்கடியான இத்தருணத்தில் சீன அரசாங்கம் வழங்கியுள்ள இந்த நிதியுதவியை பெரிதும் மெச்சினார்.

அத்துடன் இந்த நிதி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.