தாய்லாந்து மன்னராக மகா வஜ்ரலங்கோர்ன் முடி சூட்டப்பட்டார். இவர் ‘பத்தாம் ராமர்’ என அழைக்கப்படுவார்.தாய்லாந்து நாட்டில் 1782-ம் ஆண்டு முதல் சாக்ரி வம்சம் ஆட்சி செய்து வருகிறது.
அந்த நாட்டின் மன்னராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் பதவி வகித்த பூமிபால் அதுல்யதேஜ், 88 வயதான நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து புதிய மன்னராக அவரது மகன் மகா வஜ்ரலங்கோர்ன் (வயது 66) முடி சூட்டப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது மெய்க்காப்பாளர் சுதிடாவை மணந்து ராணி ஆக்கினார். இவர் மன்னரின் 4-வது மனைவி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலைநகர் பாங்காக்கில் ‘கிராண்ட் பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற அரண்மனையில் மன்னர் முடி சூட்டிக்கொள்ளும் 3 நாள் விழா நேற்று தொடங்கியது.
1950-ம் ஆண்டுக்கு பின்னர் தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டிக்கொள்ளும் முதல் விழா இதுதான் என்பதால் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 10.09 மணிக்கு மகா வஜ்ரலங்கோர்ன் தாய்லாந்து மன்னராக முடி சூட்டப்பட்டார். இவர், சாக்ரி வம்சத்தின் 10-வது மன்னர் ஆவார். இனி இவர் பத்தாம் ராமர் என அழைக்கப்படுவார்.
இதையொட்டி புனிதப்படுத்தும் சடங்குகள் நடந்தன. அவற்றை இந்து பிராமணர்கள் நடத்தினர். புத்த பிட்சுகளும் விழாவில் கலந்து கொண்டு சடங்குகள் செய்தனர். அதைத் தொடர்ந்து மன்னர் மகா வஜ்ரலங்கோர்ன் அரியாசனத்தில் அமர்ந்தார். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வைரம் பதிக்கப்பெற்ற கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது.