சந்திரயான்-2 விண்கலத்துடன் அனுப்பப்படும் ரோவர் ஆய்வு வாகனம் செப்டம்பர் 6-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடியில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான்-2 விண்கலம் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த விண்கலம் ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:-
சந்திரயான்-2 விண்கலம் சோதனைகள் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வருகிற ஜூலை 9-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் விண்வெளியின் நிலவரத்தை பொறுத்து அது விண்ணில் செலுத்தப்படும். இதில் நிலவின் தென்துருவமுனை பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக ‘ரோவர்’ ஆய்வு வாகனம் ஒன்றும் முதல்முறையாக இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனம் 35 முதல் 45 நாட்களுக்கு பிறகு அதாவது செப்டம்பர் 6-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வை வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்ட செயற்கைகோள்கள் மூலம் பயனுள்ள தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பாக வானிலை தகவல்களை அளிக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுதவிர வாகனங்கள், கப்பல்கள், விமானங்களுக்கு வழிகாட்டும் செயற்கைகோள்கள், மாணவர்கள் ஆராய்ச்சிக்கான செயற்கைகோள்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன.
இஸ்ரோவை பொறுத்தவரை, 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம் நிறைவடைந்த உடன் அதனுடைய பணியை தொடர்வதற்காக மாற்று செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறோம்.
அதன்படி தற்போது இஸ்ரோவுக்கு சொந்தமான 49 செயற்கைகோள்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதில் 18 செயற்கைகோள்கள் பூமி கண்காணிப்பு பணியை மட்டும் செய்து வருகிறது. இவற்றின் மூலம்தான் பானி புயல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உரிய நேரத்தில் பெறப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் பெரிய அளவில் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.