சிவகங்கை அருகே உள்ள திருமலை மடைகருப்பசாமி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். அதில் 320 ஆடுகளை பலியிட்டு கறி விருந்தும் தடபுடலாக நடைபெற்றது.
சிவகங்கை அருகே திருமலை ஊராட்சியில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே பழமை வாய்ந்த மடைகருப்பசாமி கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத நடைமுறை இருந்து வருகிறது. இந்த திருவிழாவுக்காக சித்திரை மாதம் முதல் நாள் அனைவரும் காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி ஆண்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழா தொடங்கியதும், கோவில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு புறப்பட்டனர்.
அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கோவில் காளைகள், வெள்ளாடுகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மலை கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
அதன்பின்னர் தொடர்ந்து 320 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது. பொங்கல், சமைத்த இறைச்சி, ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையடுத்து பூசாரிகள் சாமியாடி அருள்வாக்கு கூறினர்.
பூஜைகள் முடிந்ததும், நேற்று அதிகாலை முதல் அனைவருக்கும் கறி விருந்து தடபுடலாக நடந்தது. இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.