புதிய, புதிய காரணங்களை கண்டுபிடித்து உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் எஸ்.பி.வேலுமணி தடுக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று புதிய காரணங்களைக் கண்டுபிடித்து, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித்தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநில தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க. அரசும் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் மாறி, மாறி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒரு சிறுபிள்ளத்தனமான விளையாட்டை நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. சுதந்திரமாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை அ.தி.மு.க. அரசு தனது பவர் ஏஜெண்ட் போல் செயல்பட வைப்பது வெட்கக் கேடானது. மாநில தேர்தல் ஆணையருக்கு தேர்தலை நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு எவ்விதக் கூச்சமுமின்றி கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சக்கட்டம்.
ஐகோர்ட்டு நீதிபதி அந்தஸ்து கொடுத்து ஒரு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டால், அவரை தனது அரசுக்கு எடுபிடியாகவே செயல்பட வைப்பேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது மாநில தேர்தல் ஆணையர் பதவிக்குரிய கண்ணியத்தை சூறையாடும் கேடு கெட்ட செயல்.
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் திடீர் பேரிடர்கள், வறட்சிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது. தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாகம் என்ற தோப்பாக நிச்சயம் மாறிவிட முடியாது.
உள்ளாட்சித்துறை அமைச்சரை ஊழலுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். டெண்டர்களில் கமிஷனை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுக்கும் உள் நோக்கத்துடன் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார். ஆகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்தி வரும் ஒத்துழையாமை இயக்கத்தை மாநில தேர்தல் ஆணையர் தானாகவே முன் வந்து ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.