வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.
இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி, சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தினர். அது மட்டுமின்றி, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது.
நேற்று காலை அங்குள்ள கிழக்கு கடலோர நகரமான வோன்சான் அருகே அமைந்துள்ள ஹோடோ தீபகற்ப பகுதியில் இருந்து குறைந்த இலக்கில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்தது.
இந்த தகவலை தென்கொரியாவின் ராணுவ பணியாளர்களின் கூட்டுத்தலைமை தெரிவித்தது.
வட கொரியா ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் கிழக்கு கடலை நோக்கி 70 முதல் 200 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்ததாக அந்த தகவல் மேலும் கூறுகிறது.
தென் கொரியாவின் வெளியுறவு மந்திரி காங் கியூங் வா, “பொருளாதார தடைகளில் இருந்து வட கொரியா நிவாரணம் பெற வேண்டுமானால், அந்த நாடு அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நேரில் காணத்தக்க, உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த நிலையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனைகளை தொடங்கி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹூய், “ பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்கா சற்று தாராளத்துடன் நடந்து கொள்ளாவிட்டால், அமெரிக்கா மோசமான முடிவை சந்திக்க வேண்டியது வரும்” என இந்த வார தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்ததும் நினைவு கூரத்தக்கது.
வடகொரியாவின் ஏவுகணைகள் சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை தென் கொரியாவின் வெளியுறவு மந்திரி காங் கியூங் வா தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வட கொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனை நடத்தி இருப்பது பற்றி எடுத்துக்கூறினார். அவர்கள் இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். கூடவே, இந்த விவகாரத்தை புத்திசாலித்தனமாக சமாளிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது தங்களுக்கு தெரியும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்தது. இதையொட்டி கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வடகொரியாவின் ஏவுகணைகள் சோதனையை தொடர்ந்து நிலைமையை உற்று நோக்கி கவனித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் அடுத்தது என்ன என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.