இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்து குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் இதுவரை எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இலங்கையில், தற்போது இடம்பெற்றுள்ள இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் மதத் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் குற்றஞ்சுமத்தும், ஒரு அரசியல்வாதியைக் கூட இதுவரை எவரும் விசாரிக்கவில்லை. அவ்வாறானவர்களிடம் ஒரு வாக்குமூலத்தைக்கூட இதுவரை பெறவில்லை.
இதனால், இன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்னும் அதிருப்தியடைந்துள்ளார்கள். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் செயற்பாட்டால் தான் நாட்டில் தற்போது அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அது எந்த அடிப்படையில் இடம்பெறுகிறது என்பது மக்களுக்கு தெரியவில்லை.
இதனை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை முன்வைக்கிறார்கயே தவிர, பயங்கரவாதத்தைத் தடுக்க அரசாங்கம் ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தான் கூறவேண்டும்.
சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலகத்தில் பணியாற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியின் முதுகில் ஏற்றப் பார்க்கிறது என்பதே வெளிப்படையாக இருக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அரசுக்கு ஆயுள் குறைந்து விடும். இன்று பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விசேடமாக கத்தோலிக்க பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்றே தெரியவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில்கூட இவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இடம்பெற்றதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக அரசின் இயலாமையே வெளிப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.