இலங்கையில் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையின்போது கைப்பற்றப்படும் ஆயுதங்கள் அவன்காட் ஆயுதக் களஞ்சியசாலைக்கு உரித்தானதா என்பதை பொலிஸார் கண்டுபிடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், தௌஹீத் ஜமாத் அமைப்புக்குச் சொந்தமான அனைத்து பள்ளிவாசல்களையும் மூடி அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவன்காட் ஆயுதக் களஞ்சியசாலை மூலமாகவோ அல்லது வேறு எந்த விதத்திலோ இவ்வாறு அதிகமாக ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறியவேண்டும். இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.
ஆயுதங்களின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொலிஸார் இதுகுறித்து நிச்சயமாக விசாரணைகளை நடத்தியே ஆகவேண்டும். உண்மையில், இலங்கையில் எவ்வாறு இவ்வளவு ஆயுதங்கள் வந்தன? ரி-56 ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் என பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்போது அரச திணைக்களங்களுக்குள்ளும் ஊடுருவியுள்ளார்கள். இதுபோன்றவர்களால் தான் கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 தௌஹீத் ஜமாத் பள்ளிவாசல்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முஸ்லிம் விவகார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம், ஒவ்வொரு மதத்துக்கும் என்று தனித்தனியான அமைச்சுக்களை இல்லாதொழித்து, அனைத்து மதத்துக்கும் என்று பொதுவான அமைச்சு ஒன்றை உருவாக்க வேண்டும்.
நாம் இந்த விடயத்தில் அனைவரையும் குறைக்கூறப்போவதில்லை. ஆனால், தௌஹீத் ஜமாத் அமைப்புக்குச் சொந்தமான அனைத்துப் பள்ளிவாசல்களும் மூடப்பட வேண்டும் என்பதைத் தான் நாம் அரசிடம் வலியுறுத்துகிறோம். இவ்வாறான அடிப்படைவாதிகளை வளரவிடுவது, ஏனைய சமூகங்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே கருதப்படுகிறது.
அடிப்படைவாதிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டையும் கவனிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் இன்னொரு மதத்தை நிந்திப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்தார்.