இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்

482 0

அமெரிக்காவில் செல்வாக்கு மிகுந்த 25 எம்.பி.க்கள் வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற சலுகையை இந்தியாவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிரம்ப் அரசின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசரை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்தை அளித்து வருகிறது. இதன்படி, அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருட்கள், வரி செலுத்தாமல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படும். இந்த சலுகையை இந்தியாவும் பெற்றிருந்தது. ஆனால், கடந்த மார்ச் 4-ந் தேதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கான சலுகையை 60 நாள் காலக்கெடு விதித்து ரத்து செய்வதாக அறிவித்தார். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் செல்வாக்கு மிகுந்த 25 எம்.பி.க்கள், டிரம்ப் அரசின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில், வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற சலுகையை இந்தியாவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த சலுகையை ரத்து செய்தால், இந்தியாவுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த நினைக்கும் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.