செஞ்சி அருகே 7 நாட்கள் விரதமிருந்த பெண் துறவி ஜீவசமாதி அடைந்தார். அவரது உடல் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹவாரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது பெண். ஜெயின் மதத்தை சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குடும்ப வாழ்க்கையை கைவிட்டு துறவறம் பூண்டார். அதன்பிறகு மாதாஜியாக தீட்சை பெற்ற இவர் ஸ்ரீசுப்ரபாவுமதி மாதாஜி என்று அழைக்கப்பட்டார்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள ஜெயினர் கோவில்களுக்கு சென்று வழிபட்ட இவர் ஜெயினர்களின் தலைமையிடமான மேல்சித்தாமூரில் உள்ள மடத்தில் உணவு, குடிநீர் அருந்தாமல் விரதமிருந்து ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஸ்ரீசுப்ரபாவுமதி மாதாஜி 2 நிர்வாண சாமியார்கள், 9 மாதாஜிகளுடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் ஜெயினர் மடத்துக்கு வந்தார். கடந்த 1½ மாதமாக ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு, ஜீவ சமாதி அடைவதற்காக காத்திருந்த இவர் கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வந்தார். அவருடன் வந்த ஜெயின் துறவிகள் 11 பேரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மந்திரங்கள் ஓதி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8.50 மணிக்கு ஸ்ரீசுப்ரபாவுமதி மாதாஜி ஜீவசமாதி அடைந்தார். இதுபற்றி அறிந்து வந்த மேல்சித்தாமூர் பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜீவசமாதி அடைந்த பெண் துறவியின் உடல் மீது சந்தனகட்டைகள் அடுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீசுப்ரபாவுமதி மாதாஜியின் இறுதி சடங்கு இன்று காலை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் மாலை மற்றும் நெய் ஊற்றி வழிபட்டனர். அதன்பின்பு அவரது உடல் ஜெயின் மடத்தின் பின்புறம் உள்ள இடத்துக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் மீது சந்தன கட்டைகள் மற்றும் மூலிகைகள் வைத்து அடுக்கப்பட்டன. பின்பு நெய் மற்றும் கற்பூரம் ஏற்றி தகனம் செய்யப்பட்டது.