வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (5-ந்தேதி) காலை நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு பேரமைப்பு மாநிலத்தலைவர் தேசிய முதன்மை துணைத் தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜுலு வரவேற்றுப் பேசுகிறார். பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை முன்மொழிகிறார்.
நீதிபதி பி.ஜோதிமணி விருது வழங்குகிறார். விஞ்ஞான மயில்சாமி அண்ணா துரை கல்வி உதவித்தொகை வழங்குகிறார். அகில இந்திய வணிகர் சம்மேளன தலைவர் பி.சி.பார்டியா, பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல் லால் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள். முனைவர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூண் வாழ்த்துரை வழங்குகிறார். மாநாட்டில் தொழில் அதிபர் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் லட்சக் கணக்கான வணிகர்கள் கலந்துகொள்ளும் வகையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கார், பஸ், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. சாப்பாடு வசதி, தங்குவதற்கு புறநகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்திய வணிகர் எழுச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டு ஏற்பாடுகளை மாநிலத் தலைவருடன் மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, பேராசிரியர் ராஜ்குமார், சம்பத்குமார், செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்டத் தலைவர்கள் எஸ்.சாமுவேல், என்.டி.மோகன், ஆதிகுரு சாமி, அமல்ராஜ், ஜெயபால், எட்வர்டு, நடராஜன் உள்பட பலர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.