ஓடி விளையாடிய கடற்கரையின் அருகே புதைக்கப்பட்ட வெளிநாட்டு சகோதரர்கள்!

410 0

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானியர்கள் இருவரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானிய சகோதரரும், சகோதரியும் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த டேனியல் (19) என்ற இளைஞரும் அவரின் தங்கையான அமெலியும்(15) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தனர்.

இருவரும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓடி விளையாடிய கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாக கிறிஸ்மஸ் விடுமுறையை அவர்கள் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையில்தான் கொண்டாடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.