மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார் – சஹரானின் மனைவி வாக்குமூலம்!

312 0

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என தனது கணவன் அடிக்கடி கூறியதாக குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா வாக்குமூலமளித்துள்ளார்.

எனினும் அவர் தற்கொலை தாக்குதலை நடத்துவாறென தனக்கு தெரிந்திருக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் கடந்த மாதம் 26ஆம் திகதி படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சமரின்போது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சஹரானின் உறவினர்கள் உட்பட 15பேர் உயிரிழந்திருந்தனர்.

இதன்போது சஹரானின் மனைவி மற்றும் மகளை காயங்களுடன் மீட்ட இராணுவத்தினர், அவர்களை  வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சஹரானின் மனைவியிடம் நேற்று விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனது கணவரை கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறைக்குச் செல்லும்போதே சந்தித்ததாகவும் இதன்போதே வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக தனது கணவரை சந்தித்த தினத்தன்று சஹரான் தன்னிடம் பயணச் செலவிற்காக ஒரு பை நிறைய பணத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளார். அதில், 29ஆயிரம் ரூபாயை ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு தான் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த பையில் மொத்தமாக எவ்வளவு பணம் இருந்ததென்று தான் அறிந்திருக்கவில்லையென்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

(குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து 9,00,000 ரூபாய் பணம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது)

இதேவேளை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி மொஹமது ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே தான் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஒன்பது வெள்ளைநிற மேற்சட்டைகள், பாவடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். உனக்கு எதிர்காலத்தில் இவை தேவைப்படுமென சாரா கூறியதாலேயே தான் அவற்றை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டார்.  வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ய கூறியமைக்கான காரணம் சாராவுக்கு மாத்திரமெ தெரியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சாரா உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது)

வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான ஆகிய பிரதேசங்களிலுள்ள பல வீடுகளில் தான் தங்கியிருந்ததாகவும் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே நிந்தவூரில் வாடகை வீட்டில் தங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறையில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து பொலிஸார் தங்களைத்தேடி நிந்தவூருக்கு வரலாம் என்ற அச்சம் காரணமாகவே ஏப்ரல் 26ஆம் திகதி அந்த வீட்டைவிட்டு அவர்கள் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பின்னர் சஹரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவருடைய கணவர், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் தானும் நிந்தவூரிலிருந்து வான் ஒன்றின் மூலம் கல்முனையிலுள்ள சாய்ந்தமருதை வந்தடைந்ததாகவும் அவர்கள் அங்கு வந்து சிறிது நேரத்துக்குள்ளாகவே அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.