யாழ். மாணவர்களை கைது செய்து பொலிஸார் இனவாதத்தை தூண்டுகின்றனர் – சுகாஸ்

323 0

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து, பொலிஸார் தேவையில்லாத இனவாதத்தை பரப்புவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்கள் யாழ். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பல்கலை மாணவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது மாணவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் பயங்கரவாத சட்டம் நடைமுறைப்படுத்தியதன் பின்னர் பூனைகளை புலிகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஐ.எஸ். சர்வதேச அமைப்பை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களை பயன்படுத்தி யாழ்.பல்கலை மாணவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த ஒளிப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு அந்த அறையில் ஒட்டப்பட்டதாகும்.  அந்த ஒளிப்படம் தற்போது சிதைவடைந்து காணப்படுகின்றது. எனவே சிதைவடைந்த ஒளிப்படத்தைக்கொண்டே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இனவாதத்தை தூண்டுவதாக கூறி மாணவர்களை கைது செய்துள்ள பொலிஸாரே உண்மையில் இனவாதத்தை தூண்டுகின்றனர்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.