இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன், இந்த உலகமே தமது கவலையைப் பகிர்ந்துகொண்டது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை, தினமும் ஊடகங்கள் ஊடாக அறிந்துவருகிறோம். இவ்விடயங்களை நாம், சிறுவர்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும், பிள்ளைநேயத்துடன் முறையாகப் பகிர்ந்துகொண்டோமா என்ற வினாவுக்கான விடையைத் தேடியறிவதும் எவ்வாறு பிள்ளைநேயத்துடன் பகிர்ந்துக்கொள்வது என்பது பற்றியும் கலந்துரையாட வேண்டியது காலத்தின் தேவைப்பாடாகும்.
‘ஒரு முரண்பாடான அல்லது சிக்கலான விடயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கின்ற அல்லது தர்க்க ரீதியில் அது தொடர்பான காரணகாரியங்கள் பற்றிச் சிந்தித்துப் புரிந்துக்கொள்ளும் பக்குவம், பிள்ளைகளிடத்தில் குறிப்பாக 10 வயதுக்குக் குறைந்தவர்களிடத்தில் இருக்காது’ என, பியாஜே எனும் கல்வியியலாளர் குறிப்பிடுகிறார்.
நாம் ஏதேனும் தகவலொன்றைப் பகிர்ந்துகொள்ளும் போது, பிள்ளைகள் அவற்றின் நேரடியான பொருளை உள்ளெடுத்துக்கொள்வதுடன், அவற்றை நீண்டகாலத்துக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள். இன்று நம்மில் பலர், உண்மையான விடயங்களைவிட, எமது தனிப்பட்ட கருத்துகளையே சிறுவர்களிடத்தில் அதிகமாகப் பகிர்ந்துகொள்வதுண்டு. இதனால், பிழையான புரிதல், ஒரு இனத்தின் மீதான குரோதம் மற்றும் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பதற்கிணங்க சிறுவர்கள் இளம்வயதில் எதனைக் கற்றுக் கொள்கின்றார்களோ, அது அவர்களுடைய மனதில் நிலைத்து நிற்கும்.
ஐக்கிய நாடுகள் பொது சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்தின் (Convention on the Rights of the Child) உறுப்புரை 38ஆனது, சிறுவர்களைப் பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்து பாதுகாக்கின்றது. இதனூடாக, ஐ.நா பொதுச் சபையின் உறுப்பு நாடுகள்; அனைத்தும், 15 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை அனைத்துச் சந்தர்ப்பங்களின் போதும், 18 வயதுக்குக் குறைந்தவர்களை, சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களின் போதும், ஆயுதப் போராட்டங்கள் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிறது.
அத்துடன், 1974இல் ஆக்கப்பட்ட அவசரகால நிலைமைகளின் போது மற்றும் ஆயுத மோதல்களின் போது, பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தின் முதலாவது உறுப்புரை, தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதலின் போது சிறுவர்களும் பெண்களும் இலகுவில் பாதிக்கப்படத்தக்கவர்களாகக் காணப்படுவதால், அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது.
மேற்குறிப்பிட்ட அனைத்து ஏற்பாடுகளும், ஆயுத மோதல் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றபோது சிறுவர்களின் உடல் ரீதியிலான பாதுகாப்பையே உறுதி செய்கின்றன. ஆயுத மோதல்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது, சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய உளரீதியான பாதிப்புக்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. அல்லது அது தொடர்பில் நாம் குறைவாகவே கலந்துரையாடுகிறோம். இதற்கான பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பு, குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஊடகங்களிடமே பாரியளவில் தங்கியுள்ளது.
இவ்வாறான நேரங்களின்போது, குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகளுடன் குறித்த தாக்குதல் சம்பவங்கள் பற்றி எவ்வாறு நேயத்துடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது பற்றிக் கலந்துரையாடலாம்.
பிள்ளைகள், எந்தவொரு விடயம் பற்றியும் மிக ஆர்வத்துடன் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள விரும்புவார்கள். அதிகமான வினாக்களை எழுப்புவார்கள். இது, பிள்ளைகளுக்கே உரிய பண்பாகும். நீங்கள், ஒரு வளர்ந்தவராக அல்லது குடும்பத்தில் மூத்தவராக, உங்கள் பிள்ளைகளின் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, அவர்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் தகவல்களிலிருந்து ஆரம்பிப்பது சிறந்தது. ஏனெனில், தொலைகாட்சி, வானொலி, அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக, பிள்ளைகள் அதிகமான தகவல்களைத் தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில், அத்தகவல்கள் உண்மையல்லாத விடயங்களாக அல்லது வதந்திகளாகக்கூட இருக்கலாம். அதனால், பிள்ளைகளின் தவறான புரிதல்களில் கவனம் செலுத்துங்கள்.
பிள்ளைகள், பயங்கரவாதம் பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என அறிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் தெரிந்து வைத்திருப்பவை பிழையென்பதை நீங்கள் அறிந்தால், சரியானதை பொருத்தமான முறையில் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளின் அறிகை விருத்தியானது, வயதுக்கேற்ப வித்தியாசப்படும். அதேபோல, அவர்களிடம் இருக்கும் தகவல்களின் அளவும், வயதுக்கேற்ப வேறுபடும். அதனால், சிறுவர்களிடத்தில் ஏற்படுத்தப்படுகின்ற மனத்தாக்கங்கள் மற்றும் உணர்வுகள் வேறுபட்டவை. அதன் காரணமாக, பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இதுவரை என்ன நடந்தது, இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், பிள்ளைகள் தெரிந்திருப்பது பயனுடையதாகும். அதற்கு மாறாக, பத்திரிகைகள், தொலைகாட்சி, இணையம் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்படும் காட்சிகளைக் காண்பித்தலோ அல்லது அது பற்றிய படங்களைக் காண்பித்தலோ பயன்படமாட்டாது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து பிள்ளைகள் விடயங்களை அறிந்துகொள்ளட்டும் என நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில், அவற்றில் எப்போதும் சரியான கருத்துகள் மாத்திரமே பகிரப்படுகின்றன எனக் கருத முடியாது.
இலங்கையில் இன வன்முறைகள் தூண்டப்படுவதற்கான பிரதான கருவியாக, சமூக ஊடகமே இருந்து வருகின்றதென்பது நாமனைவரும் அறிந்த உண்மையாகும். ஆகவே, ஒரு தாக்குதல் அல்லது நெருக்கடி நிலைமை ஏற்பட்டால், சமூக ஊடகங்களின் பாவனையை மட்டுப்படுத்திவிட்டு, குடும்பமாக ஒன்றிணைந்து, பிள்ளைகளிடம் நடப்பவை பற்றியும் தேவையான விடயங்கள் பற்றியும் கலந்துரையாட வேண்டும்.
ஒரு பயங்கரவாதச் சம்பவம் இடம்பெற்றால், அவதானத்துடன் இருப்பது அவசியம். அத்துடன், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்திருத்தல் அவசியம். பிள்ளைகளால் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவோ அல்லது பாதிப்பை குறைக்கவோ முடியாது. அவர்கள், இதனைத் தங்களால் தடுக்க முடியாமல் போனதையிட்டுக் கவலையடையக் கூடும். இருப்பினும், அவ்வாறான கொடூரச் சம்பவங்களைத் தடுக்க, பல முன்னேற்பாடுகளைச் செய்திருக்க முடியும் என்பதை, அவர்களுக்கு உணரச்செய்ய வேண்டும்.
அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் எனக் கருதுதல், மீண்டுமொரு பயங்கரவாதத்துக்கு வித்திடும் என்பதை, அவர்களுக்குப் பக்குவமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களைப் பாதிப்பிலிருந்து தேற்றவுமான செயற்பாடுகளை முன்னெடுக்க, சிறுவர்களும்கூட ஒன்றிணைய முடியுமென்பதை அறிவுறுத்தலாம்.
குற்றம் செய்தது யார் என்பது பற்றிய உண்மை அறியாது, மற்றவர்களைக் குற்றங்கூறுதல் சிறந்த பண்பாகாது. அது, பாதிப்பிலிருந்தோ அல்லது அச்ச உணர்விலிருந்தோ யாரையும் மீட்டெடுக்கப் போவதுமில்லை. கவலையையும் குறைக்கப் போவதில்லை. அத்துடன், அது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைத் தராது.
இருப்பினும், இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதச் சம்பவங்களால் கொந்தளித்திருக்கும் மக்கள், அதற்குக் காரணமான தனிநபர்களை மட்டுமல்லாது, அந்தத் தனிநபர்கள் சார்ந்திருக்கின்ற ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழி சொல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இருப்பினும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளிடம் இதுபற்றிய கருத்துகளைப் பகிர்ந்து;கொள்ளும் போது, குறிப்பிட்ட பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் பற்றி சரியான கருத்துகளைப் பகிர்ந்துக்கொள்வதுடன், அவர்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி சார்ந்தவர்கள் அல்லர் என்பதையும் பகிர்ந்துக்கொள்ளுதல் வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு மதம் என்ற ஒன்று கிடையாது என்பதை, சிறுவர்களுக்கு ஆழமாகப் புரியவைக்க வேண்டும். மதம் பற்றிய தவறான புரிந்துணர்வே, பயங்கரவாதத்துக்கு வித்திட்டுள்ளது என்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இது பிள்ளைகளிடத்தில், குறிப்பிட்ட இனம், மொழி மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்கள் மீது தவறான எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கும்.
பயங்கரவாதச் செயல்கள், பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றக்கூடியதா என்ற ஒரு வினாவை முன்வைத்தால், அதற்கு பதிலளிப்பது மிகக் கடினமாகும். இருப்பினும், பிள்ளைகள் தங்கள் நண்பர்களுடன் விளையாடுவது, பாடசாலைக்குச் செல்வது போன்று தற்சார்பாகவே சிந்திப்பார்கள் என்பதை, அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒரு பயங்கரவாதச் செயல் நடைபெற்றால், அது எப்படி அவர்களைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அல்லது பாதித்தது என்பது பற்றியே கவலைப்படுவார்கள். இவ்வாறான வேளைகளில், பிள்ளைகள் சுதந்திரமாகவும் தமது எண்ணங்களை வினாக்கள் மூலம் வெளிப்படுத்த வாய்ப்புகள் காணப்படுவது அல்லது அவற்றை அமைத்துக்கொடுப்பது முக்கியமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் அதிக வினாக்களை வினவுவதன் மூலம், அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அதனையடுத்து ஏனையவர்களின் தேவைகள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.
எம்மைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதைப் பிள்ளைகள் சரியாகப் புரிந்துகொண்டார்களெனின், அவர்கள் அடுத்த கட்டமாக, ஏனையவர்களுக்கும் தாம் உதவலாம் என்பதையும் சிந்திப்பார்கள். ஒரு தாக்குதல் நடந்தால், உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது பற்றி யோசிப்பார்கள். இது, எதிர்காலத்தில் சிறந்த நல்லிணக்கமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவும்.
பிள்ளைகளின் எண்ணம், கருத்துகள், எதிர்பார்ப்பு என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் எப்போதும் சரியான விடயங்களையே அறிந்து வைத்திருப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அவர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் அவதானித்து, மிக எளிமையாகவும் நேரடியாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பதுடன், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பையும் உதவியையும் உறுதிபடுத்த வேண்டும்.
பிள்ளைகளை, அனர்த்தங்கள் அல்லது தாக்குதல்கள் பற்றிய தகவல்களைக் கேட்டு அறிந்துக்கொள்ள அனுமதிக்காது, இவ்வாறான விடயங்களைக் கலந்துரையாடுவதிலிருந்து பிள்ளைகளை விலக்களிப்பது எதிர்மறையான விளைவுகளுக்கு வித்திடும். ஆனால், நடக்கும் விடயங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வதுதான் அவர்களை இம்மாதிரியான சம்பவங்களிலிருந்து பாதுகாக்கும். ஆனால், பிள்ளைகளுக்கான பதில்களும் அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பும் அவர்களுடைய புரிதல் மட்டத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறான கலந்துரையாடல்களின் போது, பிள்ளைகள் மனக்குழப்பமடையக்கூடும். அழக்கூடும். சிலவேளைகளில், அதிக ஆர்வம் காரணமாக, விபரீதமான விடயங்கள் கூட நடைபெற்றுவிடக்கூடும். அவர்களைக் குழப்பமடையும் நிலைக்கு இட்டுச்செல்லலாம். ஆகவே, பயங்கரவாதம் பற்றி பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள். இதுவே பிள்ளைகளின் எண்ணங்களைச் செப்பனிடுகின்ற முதற்படியாக அமையும்.
பிள்ளைகளுக்குத் தெளிவு தேவைப்படுகின்ற தருணங்களில், அவர்களுடன் கலந்துரையாடுங்கள். இவ்வாறு கலந்துரையாடுதல், பிள்ளைகள் மனக்குழப்பத்திலிருக்கும்போது அவர்களுடைய எண்ணங்களை அல்லது கருத்துகளை உங்களிடத்தில் கூறலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்தும். இல்லையெனின், அவர்களிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் மறைத்துவிடுவார்கள். சில நேரங்களில் பிள்ளைகள் தாங்களாகவே அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேட தயாராகிவிடுவார்கள். இது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு மிகப்பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டால், வயது வேறுபாடின்றி பிள்ளைகளின் நிலையை அறிந்துக்கொள்ள அவர்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த வழிமுறையாகும். எனினும், பிள்ளைகளை எந்தவொரு விடயம் பற்றியும் பேச வற்புறுத்துவது சிறந்ததாகாது. ஆனால், உங்களிடம் எந்நேரத்திலும் வந்து எதைப் பற்றியும் கலந்துரையாடலாம் என்ற சுதந்திர நிலையை உருவாக்கியிருத்தல் முக்கியமானதாகும். நீங்கள் அவர்களின் கருத்துகளை எந்தவொரு நேரத்திலும் செவிமடுக்கத் தயாராக இருக்க வேண்டும். சிலவேளை, பிள்ளைகளுக்கு அவர்களைப் பற்றிப் பேசுவதைவிட ஏனைய பிள்ளைகள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுவதே இலகுவானதாக இருக்கும்.
-நா. கிருஷ்ணகுமார்