தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா, நேற்றுமுன்தினம் (01), காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நேற்றுமுன்தினம் மாலை, மதனியாவின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.
இந்தப் பணம், சஹ்ரானிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், அது, சஹ்ரானிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளப்பட்டது என, மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்னை கொழும்புக்கு வருமாறு, சஹ்ரான் அழைத்ததாகவும் இதையடுத்து, வான் ஒன்றில் கொழும்புக்குச் சென்று, கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், கடந்த ஏப்ரல் 12ஆம் திகதியன்று சஹ்ரானைச் சந்தித்தாகவும் மதனியா கூறியுள்ளார்.
இதன்போதே, தேசிய ஜமாஅத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாயைத் தன்னிடம் சஹ்ரான் வழங்கியதாகவும், மதனியா கூறியுள்ளார்.
இதேவேளை, தனக்கும் சஹரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியிலிருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய்விட்டதாகவும் கூறியிருந்த மதனியா, சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதனால், அவருடன் தமக்குத் தொடர்புகள் இல்லை என்றும், வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஏற்கெனவே மதனியா தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது, அவர் தனது அண்ணனுடனான தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.