புலிகளுக்கு எதிரான சதி – புகழேந்தி தங்கராஜ்

340 0

pukalenthi-thangaeahjபத்து நாட்களுக்கு முன் விக்னேஸ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டு தான் பற்றியெரிகிறது இன்றுவரை. தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் – என்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. அந்தப் பழியைப் புலிகள் மீது சுமத்தக் கூடும் – என்று எழுத்துமூலமாகவே எச்சரித்திருந்தார்.

விவரம் தெரியாமல் உளறுகிற சராசரி அரசியல்வாதியல்ல விக்னேஸ்வரன். ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் பார்த்துப் பேசுபவர். இப்படியொரு குற்றச்சாட்டை ஒரு மேடைப்பேச்சின் இடையே குறிப்பிடாமல் எழுத்துவடிவில் அவர் தெரிவித்தது ஏன் – என்கிற விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. என்ன காரணம் என்பது தெரியாவிட்டாலும் ‘எழுத்துமூலம்’ இந்தக் குற்றச்சாட்டை அவர் எழுப்பியதுதான் பலரது உறக்கத்தைக் கலைத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விஷயத்திலும் எக்குத்தப்பாக மூக்கை நுழைத்தது. முதலில் விக்னேஸ்வரனுக்குப் பாதுகாப்பு தேவை – என்றார்கள். அடுத்த நாளே ‘உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆதாரமில்லாமல் இப்படியெல்லாம் குற்றஞ்சாட்டுவாரா? எனவே இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்று SAME SIDE GOAL போடப் பார்த்தார்கள். (விக்னேஸ்வரனை ஆழம் பார்க்கிறார்களாம்!)

விக்னேஸ்வரனுக்குப் பாதுகாப்பு தேவை – என்கிறார்களா? விக்னேஸ்வரனை விசாரிக்கக் கூண்டிலேற்று – என்கிறார்களா? விக்னேஸ்வரனைக் கைது செய் – என்று முழங்குகிற தென்னிலங்கை சிங்கள அரசியல் எஜமானர்களின் குரலை எதிரொலிக்கிறார்களா? இவர்கள் யாரென்றே புரியவில்லை. முன்பக்கம் பார்த்தால் குப்புசாமியின் குதிரை மாதிரி தெரிகிறது பின்பக்கம் பார்த்தால் அப்புசாமியின் கழுதை மாதிரி இருக்கிறது…!

கூட்டமைப்பின் இந்தக் கூத்து பற்றியெல்லாம் கவலைப்படாமல் புன்னகை மாறாமல் விக்னேஸ்வரன் நடமாடிக் கொண்டிருப்பது பலரது வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ‘தென்னிலங்கையில் அப்படியொரு சதி நடக்கிறது’ என்கிற அவரது கூற்று சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருக்கும் தமிழ்த் தலைமைகளை நடுங்க வைத்திருக்கிறது. மக்கள் கொடுத்த அரசியல் அந்தஸ்தைப் பயன்படுத்தி சிங்கள அரசியல்வாதிகளிடம் சுயநல பேரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அவர்கள். இப்படியெல்லாம் அவர்கள் நடுங்கிச் சாவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

வவுனியாவில் விக்னேஸ்வரனைக் கண்டித்து பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ‘பின் லேடன் பிரபாகரனுக்கு என்ன நடந்ததோ அதுதான் விக்னேஸ்வரனுக்கும் நடக்கும்’ என்று எச்சரிக்கும் பேனர்களைத் தூக்கிப் பிடித்திருந்தார்கள் புத்தனின் பேரர்கள். கோதபாய ராஜபக்சவின் செல்லப்பிள்ளையான சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பான பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வெளிப்படையாக நடக்கிற ஒரு ஆர்ப்பாட்டத்திலேயே விக்னேஸ்வரனுக்கு பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுக்கப் படுகிறதென்றால் மறைமுகமாக நடக்கிற சதிகள் இதைக் காட்டிலும் வலுவானதாக இருக்குமா இருக்காதா! கூட்டமைப்பின் தலைவர் பெருமக்கள் சிலருக்கு இது புரிந்திருக்கிறது. அவர்கள் சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்கள். தேவையில்லாமல் மூக்கை நுழைத்து எதற்காக மூக்கறுபடவேண்டும் – என்று முன்ஜாக்கிரதையாக ஒதுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம் தானே!

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு வெற்றுப் பரபரப்பை நோக்கமாகக் கொண்டதல்ல! உண்மையில் அதன் பின்பாதி தென்னிலங்கைச் சிங்கள அரசியல்வாதிகள் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிற திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தைத் தோலுரிக்கிறது. ‘கொலைசெய் பழியைப் புலிமேல் போடு’ என்கிற அதன் நயவஞ்சகத்தைத்தானே ‘ராஜதந்திரம்’ என்று சொல்லித் திரிகிறார்கள் கோயபல்ஸ்களும் கோழைகளும்!

விக்னேஸ்வரனைத் தீர்த்துக் கட்டிவிட்டு விடுதலைப் புலிகள் மீது அந்தப் பழியைப் போடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க இலங்கையால் முடியும்.

‘விக்னேஸ்வரன் ஈழம் கேட்கவில்லை…. சமஷ்டி என்கிற கூட்டாட்சி உரிமையைத் தான் கேட்டார். தமிழீழம் – என்கிற தனிநாட்டு இலக்குடனேயே போராடிய விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை. அதனால் அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்’ என்கிற பொய்ப் பிரச்சாரத்தை முழுமூச்சில் மேற்கொள்வது இலங்கை அரசுக்குக் கைவந்த கலை. இந்தப் பிரச்சார அராஜகத்தில் கூட்டாளியாகி கூட்டாகக் கும்மியடிக்கக் கூட்டமைப்பும் தயங்காது.

தமிழ்நாட்டிலும் அப்படியொரு பொய்ப் பிரச்சாரத்தை அதிதீவிரமாகப் பரப்ப ஊடக ஜாம்பவான்களான லங்காரத்னாக்கள் முதல் சொந்த இனத்துக்குச் சூனியம் வைக்கிற சுவாமிகள் வரை எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்.

இப்படியொரு பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் விக்னேஸ்வரனை முன்வைத்து – பௌத்த சிங்கள இலங்கைக்கு எதிராக தமிழ் மக்கள் திரண்டு விடாமல் தடுக்க முடியும்….. விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மீண்டும் புதுப்பிக்க முடியும்…. புலிகளின் நடமாட்டம் இருப்பதால் வடகிழக்கிலிருந்து ராணுவத்தைத் திரும்பப்பெற முடியாது என்று அடம்பிடிக்க முடியும்…. புலிகளின் நேர்த்தியான அரசியல் பாதையைப் போற்றுகிறவர்களையும் கடைப்பிடிக்கிறவர்களையும் அடித்து உதைத்துச் சிறையில் அடைக்க முடியும்…. நடந்த இனப்படுகொலைக்கு எதிராக வலுவடைந்து வருகிற குரலை நசுக்க முடியும்….. இப்படி எவ்வளவோ முடியும்கள்!

இலங்கை இப்படியெல்லாம் நடந்துகொள்ளாது – என்று சுப்பிரமணியன் சுவாமியோ ஹிந்து ராமோ கூட சான்றிதழ் கொடுத்துவிட முடியாது. பாம்பின் கால் பாம்பறியும்!

ஒருபுறம் புலம்பெயர் தமிழ் உறவுகளின் உறுதியான போராட்டங்களாலும் விக்னேஸ்வரனின் சமரசமற்ற நேர்மையான அறிவாலும் இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வலுவடைந்துவருகின்றன. மறுபுறம் புலிகள் மீதான தடையை நீடிப்பது நியாயமற்றது என்கிற முடிவை நோக்கி ஐரோப்பிய சமூக நாடுகள் நகர்கின்றன. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி – என்கிற நிலையில் இருக்கிறது இலங்கை.

இந்த இக்கட்டான நிலையில் முள்ளை முள்ளாலேயே எடுக்க இலங்கை நிச்சயம் முயலும். விக்னேஸ்வரனுக்கு வைக்கிற குறி புலிகளுக்கும் சேர்த்தே வைக்கிற குறியாக இருக்கலாம். இதைத்தான் முன்னதாகவே அம்பலப்படுத்தியிருக்கிறார் விக்னேஸ்வரன்.

கூட்டாட்சியை மட்டுமே வலியுறுத்தவில்லை விக்னேஸ்வரன். இலங்கை நடத்திய இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைக் கூண்டிலேற்ற வேண்டும் என்கிறார். அதற்கு அழுத்தம் கொடுக்கிறார். இலங்கை அரசும் ராணுவமும் திட்டமிட்டே இனப்படுகொலையை மேற்கொண்டன என்கிறார். குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார். சர்வதேச விசாரணை மூலம்தான் உண்மை வெளிப்படும் என்கிறார்.

விக்னேஸ்வரனின் செய்தி தெளிவானது மட்டுமில்லாமல் வலுவானதும் கூட! இலங்கைத் தீவில் இருக்கிற ஒரு இனம் இன்னொரு இனத்தைத் திட்டமிட்டுக் கொன்று குவித்து வருகிறது என்கிற அவரது குற்றச்சாட்டில் ‘இரண்டு இனமும் எப்படி ஒன்றாய்ச் சேர்ந்து வாழமுடியும்’ என்கிற தார்மீகக் கேள்வி தொக்கி நிற்கிறது.

இது தமிழீழம் கேட்டுப் போராடிய போராளிகளுக்கும் எமது தாயக மக்களுக்கும் நிச்சயம் புரிந்திருக்கும். அதனால்தான் நம்விரலை வைத்தே நமது கண்ணை குத்துகிற கதையாய் ‘கொலை செய் பழியைப் புலி மேல் போடு’ என்கிற பாரம்பரியச் சதிக்குத் திரும்புகிறது இலங்கை.

இப்படியொரு நயவஞ்சக நாடகத்தை முன்கூட்டியே அம்பலப்படுத்தியிருப்பதன் மூலம் தன்மீதான தாக்குதலை மட்டுமின்றி தமிழினத்தின் மீதான தரக்குறைவான பொய்ப் பிரசாரத்தையும் இப்போதைக்கு விக்னேஸ்வரன் தடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்த நயவஞ்சக நாடகங்களையும் நிஜங்களையும் மூடிமறைப்பதுதான் தமிழகத்தின் ஊடக தர்மமாக இருந்தது இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் பேசாமல் புதிய குழப்பங்களை ஏற்படுத்தி சிங்கள இலங்கை குளிர்காய ‘கேம்ப் பயர்’ போடுகிற அடிமை சேவகம் இவர்களுடையது. இதிலும் மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவுக்குத்தான் முதலிடம்.

இலங்கை ராணுவத்தின் கோரப்பிடியில் நீண்டகாலம் இருந்த அன்புச் சகோதரி தமிழினி இறக்கும் தருவாயில்தான் விடுதலை செய்யப்பட்டார். அவர் உயிரிழந்த பிறகு அவரது பெயரில் வெளியான ‘கூர்வாளின் நிழலில்’ நூல் திட்டமிட்டுப் பரபரப்பாக்கப்பட்டது. அந்த நூல் பற்றியும் சகோதரி தமிழினி பற்றியும் பேசுவதற்கு முன் அதை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து நாளேடு செப்பியிருப்பது என்ன என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இலங்கை அரசுகள் தமிழினத்தை எப்படியெல்லாம் நசுக்கின என்பதை மட்டுமின்றி ‘சொந்த மக்களுக்கு விடுதலைப் புலிகள் செய்த துரோகத்தையும்’ பேசியிருக்கிறதாம் தமிழினியின் நூல். மிகுந்த மனநிறைவோடு இதைக் குறிப்பிடுகிறது ஹிந்து. இப்படிப்பட்ட நடுநிலையான பதிவுகள் அவசியம் – என்று சான்றிதழ் கொடுக்கிறது.

விக்னேஸ்வரன் மீது கைவைத்து – பழியைப் புலிகள் மீது போட்டு – நம் விரலாலேயே நமது கண்ணைக் குத்த நடக்கிற சதிக்கும் தமிழினி எழுதியதாகச் சொல்லி நமக்கு நாமே குழிபறிக்க வழிவகுக்கிற இந்தச் சதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே இலங்கையைச் சப்பரத்தில் ஏற்றுவதற்காக நம்மைச் சவப்பெட்டிக்குள் திணிக்கிற முயற்சி.

இந்த முயற்சியில் அயராது ஈடுபட்டுவருகிறவர்களின் லட்சணம் நூற்றுக்கு நூறு அவலட்சணம். அதன் ஒருமுகம்தான் ஹிந்து. இதன் ஒரிஜினல் முகத்தை நாம் மறந்துவிடவே கூடாது.

26வது மைலில் சொந்த மக்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டபோது ‘இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிராகப் போர் நடக்கிறது’ என்கிற அழுகிப்போன புளுகை வைத்து வியாபாரம் செய்த அதே ஹிந்து……..

ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை முடித்துவிட்டு ரத்தவாடையுடன் வந்து நின்ற ராஜபக்ச ‘ஒரு புல் பூண்டுக்குக் கூட பாதிப்பில்லாமல் போரை முடித்திருக்கிறோம்’ என்று கூசாமல் பேசியதை வெட்கமில்லாமல் வெளியிட்டு மகிழ்ந்த அதே ஹிந்து………..

பாரம்பரியமிக்க எமது ஈழத்துச் சொந்தங்களின் இணையற்ற வரலாற்றை அறிந்திருந்தும் ‘இலங்கைக்குக் கலப்பினம்தான் சரியான தீர்வு’ என்று பொலிகாளை மாதிரி பொறுக்கித்தனமாகப் பேசிய ராஜபக்சவின் வார்த்தைகளை வேதவாக்காக வெளியிட்ட அதே ஹிந்து…..

‘இலங்கை என்பது நாடா அல்லது மாட்டுப்பண்ணையா – என்று திருப்பிக் கேட்கத் துணியாத ஒருவரின் அரும்பெரும் தலைமையில் இயங்குகிற அதே ஹிந்து….

நட்புநாடு என்பதால் இலங்கையைக் காட்டிக்கொடுக்கக் கூடாது – என்று ஜெனிவா மாநாடு நடக்கும்போதெல்லாம் இந்தியாவுக்கு வகுப்பெடுக்கிற அதே ஹிந்து…..

அதுதான் தமிழினி நூலை முன்வைத்து புலிகள் மீது அவதூறு பரப்பும் வேலையில் இறங்கியிருக்கிறது இப்போது!

சொந்த மக்களுக்கு விடுதலைப் புலிகள் செய்த துரோகம் – என்கிற ஹிந்துவின் இன்றைய குற்றச்சாட்டுக்கும் ‘காந்தி ஹிந்து மக்களின் துரோகி’ என்கிற ஹிந்துமகாஜனசபையின் குற்றச்சாட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் அதன் பாதுகாவலர்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த நடந்த – நடக்கிற சதி.

மகிந்த ராஜபக்ச என்கிற கள்ளப் புத்தனின் திருக்கரங்களால் லங்காரத்ன விருது வாங்கிய பெருமிதத்திலிருந்து இன்னமும் மீளாதிருப்பவர்கள் அந்த மிருகத்துக்கு பாரதரத்னா விருது கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற சுவாமிகளிலிருந்து எப்படி வேறுபட்டுவிட முடியும்? கள்ளப் புத்தனைக் காப்பாற்றுவதையும் இனப்படுகொலையை மூடிமறைப்பதையும் தவிர வேறென்ன வேலை இருக்கிறது இவர்களுக்கு!

ஈழத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தள்ளியிருக்கிறது பிரான்ஸ். அதன் பாரம்பரியமிக்க நாளேடான ‘லேமான்டே’ ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக அம்பலப்படுத்திக் கொண்டிருந்தபோது 26வது மைலில் இருக்கிற ஹிந்து-க்கள் என்ன கிழித்துக் கொண்டிருந்தார்கள்? இந்தக் கேள்விக்கு பெரியவர் ராமும் அவரின் தோழர்களும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? தமிழினம் கொன்றுகுவிக்கப்பட்டபோது மகாவிஷ்ணு மாதிரி அறிதுயிலில் கிடந்தார்களா? அல்லது நடப்பது இனப்படுகொலை என்பதையே அறியாத அறியாமையில் கிடந்தார்களா?

அப்பாவித் தமிழ் மக்களை அழிக்க பாஸ்பரஸ் குண்டுகளையும் நச்சுக் குண்டுகளையும் இலங்கை பயன்படுத்தியதை அம்பலப்படுத்திய காரணத்துக்காகவே இன்றுவரை காணாமல் போனவனாக ஆக்கப்பட்டிருக்கிறானே பிரகீத் ஏக்னலிகோட…. அந்த சிங்களப் பத்திரிகையாளனுக்கு எங்கள் உறவுகள் மீது இருந்த அக்கறை கூட இல்லாமல் இக்கரையில் இருந்து பத்திரிகை நடத்துகிறார்களே… வெட்கமாயில்லையா இவர்களுக்கு!

எந்தத் தகுதியின் அடிப்படையில் எங்கள் எழுச்சியின் அடையாளங்களில் ஒன்றான எங்கள் தமிழினியை சாட்சிக்கு அழைக்கிறார்கள்? லங்காரத்ன – என்கிற தகுதியின் அடிப்படையிலா?

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எங்கள் தமிழினியை அந்தப் பரந்தன் நெருப்பைச் சந்தித்த பொழுதிலிருந்து விழுது மாதிரி எனக்குள் படர்ந்திருக்கிறது அந்த வீரச் சகோதரியின் நினைவு. வீரசிங்கம் மண்டபத்தில் ஒலித்த அந்த பெண் வேங்கையின் குரலை என்னால் மட்டுமில்லை திருமா, எழுத்தாளர், பா.செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, என்று எவராலும் மறக்க முடியாது.. அந்த நினைவைப் பகிர்ந்துகொண்டாக வேண்டும்…