முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக தொடர்ந்து மூடப்பட்டு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணைக்காக கடந்த மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக மே மாதம் 3 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு முன்கூட்டியே அறிவித்திருந்தது.
அத்துடன் தமிழ், சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணை நிறைவுக்காக ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி மூடப்பட்டு இரண்டாம் தவணைக்காக கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
இருந்தபோதும் நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் 29ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டது. என்றாலும் பாதுகாப்பு நிலைமை சீராக அமையாததால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதை எதிர்வரும் 6ஆம் திகதிவரை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
அதன் பிரகாரம் தமிழ், சிங்கள பாடசாலைகள் எதிர்வரும் 6ஆம் திகத இரண்டாம் தவணைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக தொடர்ந்து மூடப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.