முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் – ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர்

241 0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். 

இந்த சந்திப்பின் போது மிகெல் மொரடினோஸ், உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 

இந்த கடினமான சந்தர்ப்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இலங்கைக்கு வருகை தந்து தனிப்பட்ட ரீதியில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசாங்கத்திற்குத் தனது அனுதாபத்தினைத் தெரிவிக்குமாறும், இச்சந்தர்ப்பத்தில் முழு ஐக்கிய நாடுகள் சபைக் கட்டமைப்பும் இலங்கை அரசினைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்பதை அறியப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு அறிவித்துள்ளார் எனவும் பிரதிப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.