அதிரடி படையின் விசேட சோதனையில் துப்பாக்கி,வாள்கள் மீட்பு

239 0

நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள  அசாதாரண நிலைமையின் காரணமாக பாதுகாப்புப் படையினரால் விஷேட சுற்றிவளைப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட விஷேட சற்றிவளைப்பின்போது கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பண்டார தலைமையிலான பொலிஸாரும், சாகாமம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரசேங்களில் உள்ள சில வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பராமரிப்பற்றுக் காணப்படும் காணிகள் போன்றன சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

சந்தேகத்திற்கிடமான இவ்வீடுகளின் சுற்றுப் புறங்கள், வாகனங்கள்,பராமரிப்பாரற்றுக் காணப்பட்ட காணிகளில் வளர்ந்துள்ள சிறு பற்றைக் காடுகள், மற்றும்  வீடுகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் போன்றன இச்சோதனையின்போது பரிசோதிக்கப்பட்டன.

வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பொருட்கள் மிகுந்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களிடம் ஆளடையாளமும் பரிசீலிக்கப்பட்டன.
இச்சுற்றிவளைப்பினைத் தொடர்ந்து அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்பட்டது. பொலிஸாரினதும் விஷேட அதிரடிப் படையினரதும் இச்சுற்றிவளைப்பினைத் தொடர்ந்து சில மணி நேரங்களின் பின்னர் அப்பிரதேசங்களில் இயல்பு நிலை ஏற்பட்டது.