தாக்குதலில் பலியான 10 தற்கொலைதாரிகளின் சடலங்கள் அடக்கம்- பொலிஸ் பேச்சாளர்

478 0

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த குண்டுதாரிகளின் 10 பேரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும்  நீதிமன்ற பரிசோதனைகள் என்பன நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுவுக்கும் இடையில் இடம் பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலின் போது மீட்கப்பட்ட 10 பயங்கரவாதிகளினது சடலங்கள விசாரணையின் பின் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , இந்த சம்பவத்தில் 6 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், நாடுபூராகவும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இத்தகைய அவசர கால நிலையில் முப்படையினருக்கும் சந்தேகத்திற்கு இடமான பகுதியை பரிசோதனை செய்வதற்கும் , சந்தேக நபர்களை கைது செய்வதற்குமான பூரண அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் என்பவரின் சகோதரியை மட்டக்களப்பு பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான மொஹமது காசீம் மததியா என்பவரிடமிருந்து தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானினால் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டிருந்தது.

மேலும்,நாடுபூராவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நல்லிணக்கத்தையும்,நீதியையும் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே,நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படங்கள் வீடியோ கானொலிகள் என்பனவற்றை பதிவேற்றம் செய்வோர் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது . கூடிய விரைவில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்ப்படும் எனவும் தெரிவித்தார்.