டெங்கு நோய் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

291 0

டெங்கு நோய் தடுப்பூசிக்கு அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகின் முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை பிரான்ஸ் தயாரித்துள்ளது. இதன் பயன்பாட்டுக்கு இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா உள்பட வளரும் நாடுகளை அச்சுறுத்தும் நோயாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் டெங்கு நோய் கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும், தற்போது அதன் பரவலை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் சிக்கலை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம் டெங்கு நோய்க்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.
இந்த தடுப்பூசியை சோதனை முறையில் பயன்படுத்துவதற்காக இந்தோனேஷியா, தாய்லாந்து, மெக்சிகோ, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், பிரேசில், கோஸ்டா ரிகோ, பராகுவே, பெரு உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கி இருந்தன.

இந்நிலையில், டெங்கு நோய் தடுப்பூசிக்கு அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை கூறுகையில், 9 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இந்த தடுப்பூசி மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு மெக்சிகோ நாடுதான் முதலில் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.