அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 30-ம் தேதி நடந்தது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 152 ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம்.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
4 தொகுதிகளிலும் ஏற்கப்பட்டுள்ள 152 வேட்பு மனுக்களில் 113 மனுக்கள் சுயேச்சை வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.
இதையடுத்து, தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரவகுறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் 63 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 15 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கான சின்னம் இன்று மாலை ஒதுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த தொகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.