அந்நிய செலாவணி வழக்கு – சசிகலாவை 13-ம் தேதி ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு

433 0

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. 

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.
இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.