ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பரிசாக கிடைத்த சொகுசு காரை திரும்ப கொடுக்கிறார்.ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 4-வது இடம் பிடித்து சரித்திரம் படைத்தார். அவர் மயிரிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஐதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் சார்பில் தெண்டுல்கர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருடன் தீபா கர்மாகருக்கும் ரூ.30 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை கடந்த மாதத்தில் வழங்கினார்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தீபா கர்மாகர் இந்த காரை பராமரிக்க முடியாமல் பரிதவித்து வருகிறார். அங்குள்ள சாலைகள் மோசமாக இருப்பதால் அவரால் அந்த காரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட சொகுசுகாரை திரும்ப கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து தீபா கர்மாகரின் தந்தை துலால் கர்மாகர் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் ஊரில் சொகுசு காரை பராமரிக்க தேவையான சர்வீஸ் மையம் இல்லை. இதனால் காருக்கு உரிய பணத்தை கொடுத்தால் வேறு சிறிய ரக கார் வாங்கி கொள்கிறோம் என்று பரிசாக வழங்கியவரிடம் தெரிவித்து இருக்கிறோம். அவரும் அதற்கு சம்மதித்து இருக்கிறார்’ என்றார்.