கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 47 வௌிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதில், 25 பேரின் சடலங்கள் அவர்களின் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், நான்கு சீன விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே, அவர்கள் தற்கொலை குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர்.
இவர்களின் சடலங்கள் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலங்கனை சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குண்டுவெடிப்பில் சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சீனாவின் ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.