கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் புகைப்படம், இளைஞர்கள் கைது

258 0

தீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரினால் தங்கவேலாயுதபுரம் சந்தியில் இடம்பெற்ற சோதனைச் சாவடியில் வான் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.குண்டுதாரி சஹ்ரானின் புகைப்படங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் எட்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் நேற்றை தினம் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இக்கைது தொடர்பாக இராணுவத்திடம் கேட்டபோது திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சோதனைச் சாவடியில் EP.PB.2210 எனும் இலக்க வான் ஒன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த வேளை அந்த வானில் எட்டு இளைஞர்கள் இருந்தனர் இவர்கள் கண்டி, கம்பளை, கதுருவெல, சளவக்கடை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை சோதனையிட்ட வேளை இளைஞர் ஒருவரிடம் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களின் மற்றும் குண்டுவெடிப்போடு சம்மந்தப்பட்ட சஹ்ரானின் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிசாரிடம் நேற்று புதன்கிழமை மாலை கேட்டபோது இவர்கள் சாய்ந்தமருது ஆடை விற்பனை நிலையத்தில் வேலை செய்பவர்கள் என்றும் செய்தித் தளங்களில் வெளிவந்த புகைப்படங்களை கையடக்க தொலைபேசியில் பார்த்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து வான் மற்றும் சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை மாலையே விடுவித்துள்ளதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.