தாயக தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.
சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது உரிமைப்போராட்டத்தில் நாம் இழந்தவை ஏராளம். குறிப்பாக கடந்த முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் ஆயிரமாயிரம் இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். அந்த உரிமைப்போராட்டத்திற்கு பயங்கரவாதப்பட்டம் சூட்டி 2009இல் சிங்கள பெரும்பான்மை அரச நிகழ்ச்சி நிரலில் அதனை அரசாங்கம் மௌனித்தது.
அதுமட்டுமன்றி உரிமைக்கான விடுதலைப்போராட்டத்தினை மௌனிக்கச்செய்வதற்காக தமிழினத்தினை அழித்தொழிக்கவேண்டும் என்ற சிங்கள பௌத்தத்தின் நிலையான நிகழ்ச்சி நிரலையும் அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள்.
தமிழினத்தின் மீது இனவழிப்பினை கட்டவிழ்த்துவிட்டு ஆட்சியாளர்கள் தற்போது வரையில் சர்வதேசத்தினை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழினம் திட்மிட்டு அழிக்கப்பட்டபோது சர்வதேசம் தலையிடவில்லை. பின்னர் நீதிக்கான தமிழினத்தின் குரல் எழுந்தபோது அதில் சர்வதேசம் தலையிட்டாலும் உள்நாட்டு ஆட்சியாளர்கள் அதனை பொருட்டாக எடுத்துக்கொள்வதாக இல்லை.
இப்பொழுது இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தினால் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்த பயங்கரவாதம் சிங்கள, பௌத்த தேசத்தினை இலக்கு வைத்ததை விடவும் தமிழினத்தினையே இலக்கு வைத்துள்ளது. ஏற்கனவே வலிகளின் ரணத்தால் துவண்டுகொண்டிருக்கும் தமிழினத்திற்கு மற்றுமொரு அடியாகவே இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 90சதவீதமானர்கள் தமிழர்களே.
அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனத்திற்கு முகங்கொடுத்திருக்கும் தமிழினம் தற்போது பயங்கரவாதத்தின் வெறியாட்டத்திற்கும் முகங்கொடுக்கின்றது. இதனைப்பயன்படுத்தி, தமிழனத்தின் உரிமைக்கான ஜனநாயக குரல்கள் முதல் அனைத்தையுமே சிங்கள, பௌத்த ஆட்சியாளர்கள் தாயகத்தில் முடக்கிவிட்டனர்.
அரச பயங்கரவாதம் ஒருபக்கமும் பயங்கரவாதம் மறுபக்கமுமாக தமிழர்கள் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனைவிடவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தாயகம் எங்கும் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களும் சந்கேகக்கண்கொண்டு பார்க்கப்படும் நிலையுருவாகியுள்ளது.
ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களின் இந்த அவல நிலைமையை வெளிப்படுத்துவதாக இல்லை. அவர்களுக்கான வாழ்வுரிமையை பாதுகாப்பதாகவும் இல்லை.
எனவே, சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கும் தமிழினம், தற்போது தமது இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான நகர்வுகளைச் செய்வதற்கு முன்னதாக தனது வாழ்க்கைகான பாதுகாப்பையே எதிர்பார்க்கின்றது.
அந்த வகையில் உடனடியாக சர்வதேசம், தமிழினத்திற்கான பாதுகாப்பு குறித்து கரிசனைகொண்டு நடவடிக்கைளை எடுக்கவேண்டும் என்று ஒட்டுமொத்த தாயகத்தமிழர்கள் சார்பில் கோரிக்கை விடுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.