சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 12 ஆயிரம் கன அடியில் இருந்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை திறக்க மறுத்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாகச் சரிந்தது.
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்தது. நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் நீர்மட்டம் குறைந்தது. இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மட்டுமல்ல மேட்டூர் அணை மீன்பிடி தொழிலாளர்களும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. மேலும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
கடந்த திங்கட்கிழமை 4 ஆயிரத்து 438 கன அடியாக இருந்த நீர்வரத்து செவ்வாய்க்கிழமை 6 ஆயிரத்து 873 கன அடியாக அதிகரித்தது. நேற்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 83 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 237 கனஅடியாக குறைந்தது. என்றாலும் டெல்டா பகுதிகளில் பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.
இதனால் இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.78 அடியாக உள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொட்ர்ந்து மழை பெய்து வருவதால் எந்த நேரமும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.